இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, குணதிலகாவின் அபார சதம் மற்றும் ஷனாகாவின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் 50 ஓவரில் 297 ரன்களை குவித்தது. 298 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகார் ஜமான் மற்றும் அபித் அலி அமைத்து கொடுத்த அபாரமான தொடக்கம் மற்றும் ஹாரிஸ் சொஹைலின் பொறுப்பான அரைசதத்தால் 49வது ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான் அணி. 

இந்த போட்டியில் இலங்கை அணியின் பேட்டிங்கின் போது, 34வது ஓவரில் களத்தில் இருந்த இலங்கை வீரர் ஜெயசூரியா தொடைப்பகுதியில் அசௌகரியம் ஏற்பட்டதால் கீழே விழுந்து வலியால் துடித்தார். சில நொடிகள் அவர் எழாததால் அவரிடத்தில் சென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான சர்ஃபராஸ் அகமது அவருக்கு உதவி செய்தார். 

2015ல் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு வந்து ஆடியபோது, மும்பையில் நடந்த போட்டி ஒன்றில் டுப்ளெசிஸ் இதேபோல தொடையில் அசௌகரியமாக உணர, அவருக்கு தோனி உதவி செய்தார். சர்ஃபராஸின் தற்போதைய செயல், தோனியின் செயலை நினைவுபடுத்துவதாக அமைந்தது. இவையிரண்டையும் பதிவிட்டு, ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட் என்றும், தோனியை காப்பியடித்த சர்ஃபராஸ் என்றும் பலவிதமான கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர். ஆகமொத்தத்தில் சர்ஃபராஸின் செயல் வைரலாகிவிட்டது.