பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது ஃபிட்னெஸ் விஷயத்தில் வழக்கமாகவே பயங்கரமாக கிண்டலுக்கு ஆளாபவர். உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கொட்டாவி விட்டபோதே கடுமையான கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பொதுவாகவே ஃபிட்னெஸில், மற்ற நாட்டு வீரர்களை காட்டிலும் கொஞ்சம் மோசம்தான். அதனால்தான் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றதுமே டயட் விஷயத்தில் சற்று கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது ஃபிட்னெஸ் அவரது ஓட்டத்திலேயே தெரியும். பெரும்பாலும் ரன் அவுட்டாகி தான் வெளியேறுவார். இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் கூட ரன் அவுட்தான் ஆனார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் ரன் அவுட் தான் ஆனார். 

வழக்கமாக ரன் அவுட்டாகும் சர்ஃபராஸ் அகமது, இப்போது சக வீரரை ரன் அவுட்டாக்கியிருக்கிறார். ஒன்று, அவர் ரன் அவுட்டாகிறார்; இல்லையென்றால் வேறு யாரையாவது ரன் அவுட்டாக்கி விடுகிறார். தனது ஓட்டத்திறனை நிரூபிக்கும் வகையில், ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதாக கருதி, தனது சக வீரரை ரன் அவுட்டாக்கிவிட்டார். 

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்றது. இந்த போட்டியில் 166 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, 101 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது மற்றும் இஃப்டிகார் அகமது ஆகிய இருவர் மட்டுமே ஓரளவிற்கு நன்றாக ஆடினர். இவர்கள் இருவரும் பேட்டிங் ஆடியபோது இஃப்டிகார் அகமது பந்தை அடித்துவிட்டு ரன் ஓடுவதற்காக ஓட தொடங்கினார். ஆனால் ஃபீல்டர் பந்தை பிடித்துவிட்டதால் ரன் ஓடி முடிக்க முடியாது என்று தெரிந்ததும் பின்வாங்கிவிட்டார். 

ஆனால் இது இஃப்டிகார் வேண்டாம் என்று சொல்லி மீண்டும் திரும்பியதை பார்க்காத சர்ஃபராஸ் அகமது, பந்தை மட்டுமே பார்த்துக்கொண்டு பேட்டிங் க்ரீஸிற்கு ஓடினார். இஃப்டிகாரும் திரும்பியதால் இருவரும் ஒரே க்ரீஸிற்கு சென்றனர். ஆனால் சர்ஃபராஸ் அகமது முதலில் சென்றதால் இஃப்டிகார் ரன் அவுட்டானார். அந்த வீடியோ இதோ..

நன்றாக ஆடிக்கொண்டிருந்த இஃப்டிகாரை ரன் அவுட்டாக்கிவிட்டு, சர்ஃபராஸும் ஒழுங்காக ஆடவில்லை. இஃப்டிகார் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே சர்ஃபராஸும் ஆட்டமிழந்துவிட்டார். 

சர்ஃபராஸ் அகமது எதையுமே கவனிக்காமல் ஓட்டப்போட்டியில் ஓடுவதுபோல் ஓடினால் தான் ரன் அவுட்டாகாமல் ஓடிமுடிக்கமுடியும் என்பது அவருக்கே தெரிகிறது. அதனால்தான் எதையுமே கண்டுகொள்ளாமல் ஓடுவதில் மட்டுமே குறியாக இருந்திருக்கிறார். ஆனால் கிரிக்கெட்டில் அப்படியா ஓடுவது..? மறுமுனையில் இருக்கும் பேட்ஸ்மேன், ஃபீல்டர் ஆகிய அனைவரையுமே கவனித்து ரன் ஓடவேண்டும். ஆனால் சர்ஃபராஸால் இவையனைத்தையும் கவனித்து ரன் ஓடமுடியாது. அப்படி ஓடினால் ரன் அவுட்டாகிவிடுவார்.  அதனால்தான் ஓடுவதில் மட்டும் குறியாக இருந்ததோடு, பார்த்தியா நான் ரன் அவுட்டாகாமல் ஓடிவிட்டேன் என்பது போல் ஓடிமுடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இஃப்டிகார் ரன் அவுட்டானால் கூர பரவாயில்லை. ஆனால் நாம் ரன் அவுட்டானால் மறுபடியும் ரன் அவுட்டாகிவிட்டோம் என்ற கிண்டலுக்கு பயந்தே இஃப்டிகாரை ரன் அவுட்டாக்கிவிட்டார்.