Asianet News TamilAsianet News Tamil

Ashwin vs Shastri: அஷ்வின் விஷயத்துல சாஸ்திரி பேசுனது சரிதான்..! முட்டு கொடுக்கும் முன்னாள் தேர்வாளர்

அஷ்வின் விஷயத்தில் ரவி சாஸ்திரி பேசியது சரிதான் என்று முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் கருத்து கூறியுள்ளார்.

sarandeep singh backs ravi shastri is right in the matter of ravichandran ashwin
Author
Chennai, First Published Dec 26, 2021, 8:02 PM IST

இந்திய அணியின் சிறந்த ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வின், சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் ஸ்பின்னர்களில் ஒருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 427 விக்கெட் வீழ்த்தியுள்ள அஷ்வின், அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே மற்றும் கபில் தேவுக்கு அடுத்து 3வது இடத்தில் உள்ளார். இன்னும் 8 விக்கெட் வீழ்த்தினால் கபில் தேவை பின்னுக்குத்தள்ளி 2வது இடத்தை பிடித்துவிடுவார்.

தோனி தலைமையிலான இந்திய அணியில் அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடியாக திகழ்ந்தது. விராட் கோலி கேப்டன் பொறுப்பேற்றதும், ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதனால் அஷ்வின் - ஜடேஜாவின் இடத்தை குல்தீப் - சாஹல் பிடித்தனர். 2 ஆண்டுகள் குல்தீப் - சாஹல் ஜோடி இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தியது. அஷ்வின் - ஜடேஜா ஓரங்கட்டப்பட்டனர்.

ஜடேஜா ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில், அஷ்வின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆனால் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவந்தார். ஆனால் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் அஷ்வினுக்கு ஆடும் லெவனில் இடம் வழங்கப்படாமல் இருந்தது. ஜடேஜா 2018ம் ஆண்டே வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளில் கம்பேக் கொடுத்த போதிலும், அஷ்வின் ஓரங்கட்டப்பட்டே இருந்தார்.

அந்த சமயத்தில் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் அஷ்வின் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டு, குல்தீப் யாதவே அணியில் எடுக்கப்பட்டார். இப்போது அஷ்வின் அனைத்துவிதமான அணிகளிலும் கம்பேக் கொடுத்து மீண்டும் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்து அசத்திவருகிறார்.

ஆனால் அஷ்வின் ஓரங்கட்டப்பட்ட அந்த சமயத்தில் 2018 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் குல்தீப் இந்திய அணியின் ஸ்பின்னராக ஆடினார். சிட்னி டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் குல்தீப். அப்போதுதான் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

அந்த சமயத்தில் அஷ்வின் குறித்து பேசிய ரவி சாஸ்திரி, ஒவ்வொரு வீரருக்கும் முடிவு இருக்கிறது (அஷ்வினின் ஃபிட்னெஸ் குறித்து பேசும்போது). ஆனால் இப்போதைக்கு குல்தீப் யாதவ் தான் எங்களது முதன்மையான ஸ்பின்னர் என்றார் சாஸ்திரி.

இப்போது டெஸ்ட் அணியில் மட்டுமல்லாது வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளிலும் கம்பேக் கொடுத்துவிட்ட அஷ்வின், அந்த சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார். சாஸ்திரியின் கருத்து தன்னை எப்படி பாதித்தது என்பது குறித்து பேசிய அஷ்வின், ரவி (சாஸ்திரி) bhai மீது மிகுந்த மதிப்பு உள்ளது. எங்கள் அனைவருக்குமே மிகுந்த மதிப்பு உள்ளது. அவர் அந்த கருத்தை கூறிய தருணத்தில் நான் சுக்குநூறாக நொறுங்கிவிட்டேன். சக வீரரின் வெற்றியில் மகிழ்ச்சி கொள்வது முக்கியம் என்பது எங்களுக்கு தெரியும். நான் குல்தீப்பிற்காக மகிழ்ச்சி தான் அடைந்தேன். நான் மிகச்சிறப்பாக பந்துவீசிய சமயங்களிலும் கூட, ஆஸ்திரேலியாவில் 5 விக்கெட் வீழ்த்தியதில்லை. எனவே ஆஸ்திரேலியாவில் 5 விக்கெட் வீழ்த்துவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும் என்பதால், குல்தீப்பிற்காக நான் மகிழ்ச்சி தான் அடைந்தேன் என்று அஷ்வின் கூறியிருந்தார்.

இந்நிலையில், அஷ்வின் பேசியதற்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, அஷ்வின் சிட்னி டெஸ்ட்டில் ஆடவில்லை. குல்தீப் அந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசினார். எனவே குல்தீப்பிற்கான வாய்ப்புகளை வழங்குவதுதான் நியாயமானது. என் பேச்சு அஷ்வினை கஷ்டப்படுத்தியிருந்தால் அதில் எனக்கு சந்தோஷம் தான். ஏனெனில் அதற்கு பின்னர் தான் அவரது திறமையை மேலும் வளர்த்துக்கொண்டு இன்றைக்கு ஜொலிக்கிறார். ஒரு பயிற்சியாளராக, வீரர்களது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவருவதுதான் எனது வேலை. அதைவிடுத்து, அனைவரது ரொட்டியிலும் பட்டர் தடவுவது என் வேலை கிடையாது. என் பேச்சு அவரை(அஷ்வின்) கீழே தள்ளி பேருந்தை மேலே ஏற்றுவது போல் இருந்தது என்று அஷ்வின் கூறியிருக்கிறார். ஆனால் பேருந்தை 3 அடிக்கு முன்பே நிறுத்துமாறு ஓட்டுநரிடம் நான் சொல்லிவிட்டேன் என்று சாஸ்திரி விளக்கமளித்தார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங், ரவி சாஸ்திரி 2018ல் பேசியதை அஷ்வின் தவறாக எடுத்துகொண்டுள்ளார். அந்த சுற்றுப்பயணத்தின்போது நானும் தான் இருந்தேன். சாஸ்திரி பேசியபோது நான் இருந்தேன். வெளிநாடுகளில் குல்தீப் தான் எங்கள்(இந்திய அணி) சிறந்த பவுலர். அவரது பவுலிங் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கிறது என்றார் சாஸ்திரி. அதை அஷ்வின் தவறான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறார். சாஸ்திரி சொன்னது சரிதான். அனைவரையும் தாஜா செய்வதுபோல் அவரால் பேசமுடியாது என்றார் சரண்தீப் சிங்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios