இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடர் திருவனந்தபுரத்தில் நடந்தது. 

5 போட்டிகளுமே திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்ஃபீல்ட் மைதானத்தில் தான் நடந்தது. இந்த தொடரை 4-1 என இந்தியா ஏ அணி வென்றது. திருவனந்தபுரத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் 5 போட்டிகளில் ஒன்று கூட முழுமையாக நடைபெறவில்லை.

அனைத்து போட்டிகளுமே மழையால் பாதிக்கப்பட்டு, ஓவர்கள் குறைக்கப்பட்டே நடத்தப்பட்டன. ஆனால் அவ்வளவு மழையிலும் ஒரு போட்டி கூட ரத்தாகவில்லை. அதற்கு காரணம், மைதான ஊழியர்களின் கடும் உழைப்புதான். மைதானத்திற்கு வந்துவிட்டு மழையால் போட்டி ரத்தாகி, வீரர்களும் ரசிகர்களும் அதிருப்தியுடன் திரும்பக்கூடாது என்பதற்காக, கடுமையாக உழைத்து மைதானத்தை தயார் செய்து கொடுத்தனர். 

மைதான ஊழியர்களின் கடும் உழைப்பு இல்லாமல் இந்த போட்டிகள் நடந்திருப்பது சாத்தியமில்லை. எனவே அவர்களது உழைப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் பாராட்டும் விதமாகவும் சஞ்சு சாம்சன், தனது ஊதியம் முழுவதையும் மைதான ஊழியர்களுக்கே கொடுத்துவிட்டார். 

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே சஞ்சு சாம்சன் ஆடினார். ஒரு போட்டிக்கு அவருக்கு ரூ.75,000 ஊதியம். அந்தவகையில் இரண்டு போட்டிகளுக்கான அவரது ஊதியமான ஒன்றரை லட்சம் ரூபாயை மைதான ஊழியர்களுக்கு வழங்கினார். 

கடைசி போட்டியில் சஞ்சு சாம்சன், அபாரமாக ஆடி 91 ரன்களை குவித்து அசத்தினார். அவரது அருமையான பேட்டிங்கை கண்ட கம்பீரும் ஹர்பஜனும் அவரை இந்திய ஒருநாள் அணியில் சேர்த்து நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.