மும்பை இந்தியன்ஸ் அணியில் சீனியர் வீரர் கைரன் பொல்லார்டு தொடர்ந்து ஆடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர். 

ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமாக ஆடிவருகிறது. 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனில் இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மும்பை அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, பொல்லார்டு ஆகியோர் சோபிக்கவில்லை. பவுலிங்கும் படுமோசமாக உள்ளது. பும்ராவைத்தவிர வேறு யாருமே சரியாக பந்துவீசுவதில்லை. எனவே தான் தொடர் தோல்விகளை தழுவிவருகிறது மும்பை அணி.

முதல் வெற்றியை எதிர்நோக்கியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. இந்த சீசனில் பொல்லார்டு சொதப்பிவரும் நிலையில், அணியில் அவரது இடம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர். 

2010ம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான பொல்லார்டு, அன்று முதல் இன்றுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவருகிறார். மும்பை அணிக்காக பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து, 5 முறை மும்பை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த வீரர் பொல்லார்டு. 

ஆனால் கடந்த 2 சீசன்களாகவே பெரிதாக அடித்து ஆடமுடியாமல் திணறும் பொல்லார்டு, இந்த சீசனில் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் வெறும் 82 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரது சராசரி வெறும் 16.4 ஆகும். பவுலிங்கும் பெரிதாக வீசுவதில்லை.

இந்நிலையில், பொல்லார்டை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடவைப்பதென்றால், அதுகுறித்து மும்பை அணி யோசிக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், பொல்லார்டு கண்டிப்பாக குறைந்தது 3 ஓவர்களாவது வீசவேண்டும். அவரது பவுலிங் மும்பை அணிக்கு தேவைப்படுகிறது. நெருக்கடியான சூழல்களில் மற்ற பவுலர்களை விட பொல்லார்டு சிறந்த பவுலர். அப்படி இல்லாமல் பொல்லார்டை வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் ஆடவைப்பதென்றால், அவரது ஸ்கோர் மற்றும் பேட்டிங் பங்களிப்புகளை பரிசீலித்து யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.