உலக கோப்பை முடிந்த நிலையில், பல முன்னாள் வீரர்கள் உலக கோப்பையின் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அணியை தேர்வு செய்துவருகின்றனர். 

சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர் ஆகிய ஜாம்பவான்கள் தேர்வு செய்திருந்தனர். ஐசிசியும் சிறந்த அணியை தேர்வு செய்து அறிவித்திருந்தது. இந்நிலையில் உலக கோப்பை தொடரின் வர்ணனையாளராக இருந்து பல சர்ச்சைகளை சந்தித்த சஞ்சய் மஞ்சரேக்கரும் தனது சிறந்த அணியை அறிவித்துள்ளார். 

உலக கோப்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜேசன் ராய் ஆகிய இருவரையும் மஞ்சரேக்கர் தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா 648 ரன்களுடன் இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரராக திகழ்கிறார். இங்கிலாந்து அணி கோப்பையை வெல்வதற்கு ஜேசன் ராயும் ஒரு முக்கிய காரணம்.

இந்த உலக கோப்பையில் மூன்றாம் வரிசையில் அசத்திய ஷகிப் அல் ஹசனை அந்த வரிசைக்கு தேர்வு செய்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை நான்காம் வரிசை வீரராகவும் கேன் வில்லியம்சனை ஐந்தாம் வரிசை வீரராகவும் மஞ்சரேக்கர் தேர்வு செய்துள்ளார். 

விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக அலெக்ஸ் கேரியையும் ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், ஆர்ச்சர், பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் பும்ரா ஆகிய நால்வரையும் மஞ்சரேக்கர் தேர்வு செய்துள்ளார். ஸ்பின் பவுலராக சாண்ட்னெரை தேர்வு செய்துள்ளார். யாருமே பாகிஸ்தான் அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹின் அஃப்ரிடியை தேர்வு செய்யாத நிலையில், மஞ்சரேக்கர் மட்டும் தான் அவரை தேர்வு செய்துள்ளார். ஷாஹின் உலக கோப்பையில் நன்றாகத்தான் ஆடினார். 

ஐசிசி, சச்சின், கவாஸ்கரை போலவே மஞ்சரேக்கரும் வில்லியம்சனைத்தான் கேப்டனாக தேர்வு செய்துள்ளார். 

மஞ்சரேக்கரின் 2019 உலக கோப்பையின் சிறந்த அணி:

ரோஹித், ராய், ஷகிப் அல் ஹசன், கோலி, வில்லியம்சன்(கேப்டன்), அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), சாண்ட்னெர், ஸ்டார்க், ஆர்ச்சர், ஷாஹின் அஃப்ரிடி, பும்ரா.