Asianet News TamilAsianet News Tamil

ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் யார்..? இவங்க 3 பேரில் ஒருத்தர் தான்..!

ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 

sanjay manjrekar opines who can take over captaincy of rcb after virat kohli from ipl 2022
Author
Chennai, First Published Sep 25, 2021, 9:50 PM IST

ஐபிஎல் தொடங்கிய 2008லிருந்து ஆர்சிபி அணியில் ஆடிவரும் விராட் கோலி, 2013லிருந்து அந்த அணியின் கேப்டனாகவும் இருந்துவருகிறார்.

ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்கு ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்ற விமர்சனம் விராட் கோலி மீது உள்ளது. 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோஹித் சர்மாவின் கேப்டன்சியுடன் ஒப்பிடப்பட்டு கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட கோலி, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுவந்தார்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அவரது பேட்டிங்கும் படுமோசமான சரிவை சந்தித்திருக்கிறது. 2 ஆண்டுகளாக படுமோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்துவரும் கோலி, ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். 3 விதமான இந்திய அணிகளின் கேப்டன்சி, ஐபிஎல் கேப்டன்சி ஆகிய பணிச்சுமை, சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி கோப்பையை வெல்லவில்லை, ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை ஆகிய விமர்சனங்கள் அவரது பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலி, இந்த ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. எனவே ஆர்சிபி அணி புதிய கேப்டனை தேர்வு செய்து அணியில் எடுக்க இதுவே சரியான தருணம் என்பதால், இந்த சீசனுடன் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கோலி.

ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினாலும், ஐபிஎல்லில் கடைசி வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடப்போவதாகவும் விராட் கோலி தெரிவித்தார்.

கோலி கேப்டன்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்ததையடுத்து, அடுத்த சீசனிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டன்சி பொறுப்பை எடுக்கப்போவது யார் என்ற விவாதம் நடந்துவருகிறது. இதுதொடர்பாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், அதுகுறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், ஏபி டிவில்லியர்ஸை கேப்டனாக நியமித்தாலும், அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் கேப்டனாக செயல்படுவார்? குறைந்தது 3 ஆண்டுகளாவது ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்படும் ஒரு வீரரைத்தான் ஆர்சிபி கேப்டனாக நியமிக்க வேண்டும். அந்தவகையில், தலைமைத்துவ பண்புகளும், திறமையும் கொண்ட பொல்லார்டை கேப்டனாக நியமிக்கலாம். சூர்யகுமார் யாதவ், டேவிட் வார்னர் ஆகியோரும் கூட ஆர்சிபி அணியின் கேப்டனுக்கான போட்டியில் இருக்கலாம் என நினைக்கிறேன். சூர்யகுமார், வார்னர் ஆகியோரும் கேப்டன்சிக்கு தகுதியானவர்கள் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios