டி20 உலக கோப்பைக்கான 17-18 வீரர்களை கொண்ட இந்திய அணி இந்நேரம் தேர்வு செய்யப்பட்டு தயாராக இருக்கும் என்று முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கருத்து கூறியுள்ளார். 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. அந்த உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. ரோஹித் சர்மா தலைமையில் இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி களமிறங்குகிறது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க பல வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், பும்ரா, ஷமி ஆகிய டாப் வீரர்கள் இல்லாமல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஆடிவரும் டி20 தொடரில் இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகிய வீரர்கள் அபாரமாக ஆடிவருகின்றனர்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். உம்ரான்மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ரோஹித், கோலி, ராகுல், பும்ரா, ஷமி, சூர்யகுமார் யாதவ் ஆகிய முன்னணி வீரர்கள் அணிக்கு திரும்பிவிட்டால், அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் வாய்ப்பை இழப்பார்கள்.

ரோஹித், ராகுல், கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி அஷ்வின், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்களும் இந்த போட்டியில் உள்ளனர். 

எனவே எந்தெந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு கடும் சவாலாகவே இருக்கும்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார், உம்ரான் மாலிக் ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசினார். இந்திய அணி டிரெஸிங் ரூம் சூழல் எப்படியிருக்கிறது, அணி மீட்டிங், திட்டமிடல் ஆகியவை குறித்த புரிதல் வரவேண்டும் என்பதற்காகவே உம்ரான் மாலிக் இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 11 வீரர்கள் ஆடிவருகின்றனர். சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்திய அணியில் இடம்பெறும் 17-18 வீரர்கள் ஏற்கனவே ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுவிட்டனர் என்று நினைப்பதாக சஞ்சய் பங்கார் கூறியுள்ளார்.