சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரும் அறியப்படுகின்றனர். இவர்கள் வரிசையில் இணையுமளவிற்கு தரமான பேட்ஸ்மேன் பாபர் அசாம். 

பாபர் அசாம், விராட் கோலியை போல மிகச்சிறந்த வீரர் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் அவரை புகழ்ந்துள்ளனர். மிகவும் நேர்த்தியாகவும் தெளிவாகவும் ஆடி ரன்களை குவித்துவரும் பாபர் அசாம், இன்னும் தனது பேட்டிங்கை மேம்படுத்தினால், எதிர்காலத்தில் தலைசிறந்த வீரராக திகழ்வார் என்று பலரும் பாராட்டிவருகின்றனர். 

சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக ஆடிவருகிறார் பாபர் அசாம். இந்நிலையில், பாகிஸ்தானில் நடந்துவரும் டி20 சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காக ஆடும் பாபர் அசாம், பெஷாவர் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 56 பந்தில் 78 ரன்களை குவித்து கராச்சி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

இதையடுத்து, பாபர் அசாமை இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் லெஜண்ட் கிரிக்கெட் வீரருமான சங்கக்கரா வெகுவாக புகழ்ந்துள்ளார். பாபர் அசாம் குறித்து பேசிய சங்கக்கரா, பாபர் அசாமின் பேட்டிங்கை நான் நீண்டகாலமாக பார்த்து கொண்டிருக்கிறேன். கராச்சி கிங்ஸ் அணியில் அவருடன் நான் ஆடியும் இருக்கிறேன். அவர் அருமையான பேட்ஸ்மேன். சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர். கோலி, வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரின் வரிசையில் பாபர் அசாமும் சிறந்த வீரர். எல்லா விதமான ஃபார்மட்டிற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டு சிறப்பாக ஆடுகிறார். அவர் ஒரு ஸ்பெஷலான வீரர். பாபர் அசாம் ஏற்கனவே என்னையெல்லம மிஞ்சிவிட்டார் என்றே நினைக்கிறேன் என்று சங்கக்கரா தெரிவித்துள்ளார்.