IPL 2023: ஃபைனலில் CSK-விற்கு எமனாக அமைந்த தமிழக வீரர் சாய் சுதர்சன்; சதம் மிஸ்ஸிங்! கடின இலக்கை நிர்ணயித்த GT
ஐபிஎல் 16வது சீசன் ஃபைனலில் சிஎஸ்கேவிற்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவரில் 214 ரன்களை குவித்து 215 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று (மே28) நடந்திருக்க வேண்டியது. மழை காரணமாக இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு சாம்பியன் அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமான ஆடும் லெவன் காம்பினேஷனுடன் களமிறங்கின.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ரிதிமான் சஹா ஆகிய இருவரும் அடித்து ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 20 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் விளாசிய கில்லை தோனி ஸ்டம்பிங் செய்து அனுப்பினார். அதன்பின்னரும் நன்றாக அடித்து ஆடி அரைசதம் அடித்த சஹா 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
சஹாவுடன் இணைந்து நன்றாக பேட்டிங் ஆடிய சாய் சுதர்சன், சஹாவின் விக்கெட்டுக்கு பின், செட்டில் பேட்ஸ்மேன் என்ற முறையில் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து அடித்து ஆடி சதத்தை நெருங்கிய சாய் சுதர்சன், கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளையும் சிக்ஸர்கள் விளாசி சதத்தை நெருங்கிய சாய் சுதர்சன் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
ஹர்திக் பாண்டியா அடித்து ஆடி 12 பந்தில் 21 ரன்கள் அடித்து முடித்து கொடுக்க, 20 ஓவரில் 214 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 215 ரன்கள் என்ற கடின இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.