சச்சின் - கங்குலி ஜோடி என்பது சர்வதேச கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்டிங் ஜோடி. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், அதிகமான ரன்களை குவித்த பேட்டிங் ஜோடி சச்சின் - கங்குலி தான். ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினும் கங்குலியும் இணைந்து 176 இன்னிங்ஸ்களில் 8227 ரன்களை குவித்துள்ளனர். 

சச்சின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், அவரால் வெற்றிகரமான கேப்டனாக திகழமுடியவில்லை. கேப்டன்சியில் தோற்றுவிட்டார். ஆனால் கங்குலி அதிரடி பேட்ஸ்மேனாக மட்டுமல்லாது, மிகச்சிறந்த கேப்டனாகவும் திகழ்ந்தார். சூதாட்டப்புகாரால் சிக்கி சின்னபின்னமாகியிருந்த இந்திய அணியை சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், முகமது கைஃப், ஹர்பஜன் சிங் ஆகிய இளம் வீரர்களை அடையாளம் கண்டு அணியை சிறப்பான அணியாக வளர்த்தெடுத்தார். சச்சின், டிராவிட், கும்ப்ளே, ஸ்ரீநாத் ஆகிய சீனியர் வீரர்களும் இளம் வீரர்களும் நிறைந்த அணியை சிறப்பாக வழிநடத்தினார். 

தனது தலைமைத்துவ பண்புகளாலும் நிர்வாகத்திறனாலும் சிறந்த கேப்டனாக இருந்த கங்குலி, தற்போது பிசிசிஐ தலைவராக உள்ளார். இந்நிலையில், சச்சின் கேப்டனாக இருந்தபோது கங்குலியை மிரட்டிய சம்பவத்தை சீனியர் பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார். 

1997ல் பார்படாஸில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அணி 120 ரன்கள் என்ற இலக்கை இரண்டாவது இன்னிங்ஸில் விரட்ட முடியாமல் வெறும் 81 ரன்கள் மட்டுமே அடித்து 38 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை தழுவியது. அதற்கு முன்பும் சில தொடர்களில் இந்திய அணி தோற்றது. அதனால் சச்சின் கடும் அதிருப்தியில் இருந்த சமயத்தில் நடந்த சம்பவத்தைத்தான் பத்திரிகையாளர் விக்ராந்த் குப்தா பகிர்ந்துள்ளார். 

ஸ்போர்ட்ஸ் டாக்கிற்கு பத்திரிகையாளர் விக்ராந்த் குப்தா அளித்த பேட்டியில், 1997 பார்படாஸில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்டில் தோற்றபின், அப்போதைய கேப்டன் சச்சின், டிரெஸ்ஸிங் ரூமில் அனைத்து வீரர்களையும் உட்காரவைத்து பாடம் எடுத்தார். 2 டெஸ்ட் தொடர்களில் தோற்றதால், அவரது கேப்டன்சியில் மீதே சந்தேகமடைந்தார். அப்போது, அணிக்கு புதிதான கங்குலி, சச்சினை தேற்றுவதற்காக அவரிடம் சென்றார். தன்னை நோக்கி வந்த கங்குலியிடம், நாளை காலை ஓட்டத்துக்கு தயாராகுங்கள் என்று சச்சின் சொன்னார். ஆனால் கங்குலி சச்சின் சொன்னதை கேட்காமல் அசால்ட்டாக இருந்துள்ளார். ஏற்கனவே கங்குலி மீது அதிருப்தியில் இருந்த சச்சின் மேலும் கோபமடைந்து, இப்போதே உனது(கங்குலியின்) கிரிக்கெட் கெரியரை முடித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்று சச்சின் மிரட்டியதாக விக்ராந்த் குப்தா தெரிவித்துள்ளார்.