இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான 19 வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன்  மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகிய மூவருக்கும் முதல் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.

அதேபோல, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று, பின்னர் காயம் காரணமாக ஆஸி.,க்கு செல்ல முடியாமல் போன, தமிழக ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியும் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், அவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவீட் செய்துள்ள சச்சின் டெண்டுல்கர், இந்திய அணிக்காக ஆட முதல் முறையாக அழைப்பை பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகிய மூவருக்கும், ஆஸி., தொடரை தவறவிட்டு மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ள வருண் சக்கரவர்த்திக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தியாவிற்காக ஆடுவது எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் மிகவும் பெருமையான விஷயம். உங்கள் அனைவருக்கும் நிறைய வெற்றிகளை பெற்று சாதிக்க வாழ்த்துக்கள் என்று சச்சின் டெண்டுல்கர் வாழ்த்தியுள்ளார்.