கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பாரம்பரிய எதிரி அணிகளாக திகழ்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். அதிலும் உலக கோப்பை தொடரில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்றால் கூடுதல் பரபரப்பு இருக்கும். 

உலக கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. இதுவரை உலக கோப்பையில் ஆடிய 6 போட்டிகளிலும் இந்திய அணிதான் வென்றுள்ளது. அதனால் முதன்முறையாக இந்திய அணியை உலக கோப்பையில் வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்துவது மிகவும் கடினம்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில் பல முன்னாள் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை நினைவுகளை பகிர்ந்துவருகின்றனர். அந்தவகையில், பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை உலக கோப்பை போட்டிகளில் ஆடி அதில் 3 முறை ஆட்டநாயகன் விருதை வென்ற மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் நினைவுகளை பகிர்ந்தார்.

2003 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி அன்வரின் அதிரடி சதத்தால் 274 ரன்களை குவித்தது. சச்சின் டெண்டுல்கர் 98 ரன்கள் குவித்து வெறும் 2 ரன்னில் சதத்தை தவறவிட்ட அந்த போட்டியில், டிராவிட்டும் யுவராஜும் இணைந்து இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். அந்த போட்டியின் ஆட்டநாயகன் சச்சின் தான். 

அந்த போட்டி குறித்து பேசிய சச்சின், 2003 உலக கோப்பையில் பாகிஸ்தானுடனான போட்டி தேதி தெரிந்ததிலிருந்தே அந்த போட்டியில் எப்படி வெற்றி பெறுவது என்ற எண்ணம் தொற்றிக்கொண்டது. அதுவும் அந்த போட்டிக்கு முந்தைய நாள் இரவு யாருமே தூங்கவில்லை. நாளை எப்படி ஆடப்போகிறோம் என்ற நினைப்பு, யாரையும் தூங்கவிடவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தோம் என்று சச்சின் தெரிவித்துள்ளார்.