ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இறுதி போட்டியில் மோதின. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியை கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 

ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி வெறும் 149 ரன்கள் மட்டும்தான் எடுத்தது. ஆனால் பும்ரா, மலிங்கா, ராகுல் சாஹர் என நல்ல பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பதால், 150 ரன்கள் என்ற இலக்கைக்கூட எட்டவிடாமல் சிஎஸ்கே அணியை தடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்.

போட்டிக்கு பின்னர் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐகான் சச்சின் டெண்டுல்கர், தோனியின் ரன் அவுட்டுதான் ஆட்டத்தின் திருப்புமுனை என்று கூறினார். சச்சின் கூறியதைப்போலவே, தோனியின் ரன் அவுட்டுதான் சிஎஸ்கேவிடமிருந்து ஆட்டத்தை பறித்தது. அதன்பின்னர் மும்பை அணி சிஎஸ்கேவிற்கு நெருக்கடி கொடுத்தது. 

இலக்கு எளிதானது தான் என்பதால், தோனி ஆட்டமிழப்பதற்கு முன் ஆட்டம் சிஎஸ்கேவிற்கு சாதமாகவே இருந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் வாட்சன் களத்தில் நிலைத்து நின்றார். 

மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட்டுகளை வீழ்த்தினால் தான் வெல்லமுடியும் என்ற சூழலில் இருந்த நிலையில், முக்கியமான விக்கெட்டான தோனியின் விக்கெட் விழுந்தது. யாருமே எதிர்பார்த்திராத வகையில் தோனி ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். 13வது ஓவரின் 5வது பந்தை வாட்சன் அடிக்க, அதை பிடித்த மலிங்கா, ரன் ஓடி முடிக்கப்பட்ட பின்னர் தேவையில்லாமல் ஓவர் த்ரோ விட்டார். அதை லாங் ஆஃப் திசையில் இருந்த இஷான் கிஷான் ஓடிவந்து பிடித்து நேரடியாக ஸ்டம்பில் அடித்தார். 

மிகவும் க்ளோசான அந்த ரன் அவுட்டை அவுட்டா இல்லையா என்பதை ஆராய தேர்வு அம்பயர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். அந்தளவிற்கு க்ளோசான ரன் அவுட் அது. அந்த விக்கெட்டுதான் ஆட்டத்தை தலைகீழாக திருப்பியது.