சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழக்கம்.

2019ம் ஆண்டுக்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆலன் டொனால்டு மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடிக்கும் ஆறாவது இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். சச்சினுக்கு முன்னதாக பிஷன் பேடி, கவாஸ்கர், கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகிய ஐந்து வீரர்களும் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்துள்ளனர். ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு இடம்பிடித்தார். 

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆனபிறகுதான் இந்த பட்டியலில் இடம்பிடிக்க முடியும். சச்சின் டெண்டுல்கர் 2013ம் ஆண்டு தான் ஓய்வு பெற்றார். அதனால் தான் கடந்த ஆண்டு அவர் இந்த பட்டியலில் இடம்பெற தகுதி பெறவில்லை. அவர் ஓய்வு பெற்று ஐந்தாண்டுகள் ஆன உடனேயே சச்சின் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்துவிட்டார். 

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், 1989ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை 24 ஆண்டுகள் இந்திய அணியில் ஆடினார். சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கின் பெரும்பாலான சாதனைகளுக்கு சச்சின் டெண்டுல்கர் தான் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.