உலக கோப்பை வரும் வியாழக்கிழமை தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளையும் லீக் சுற்றில் எதிர்கொண்டு ஆடுகின்றன. அதனால் இந்த உலக கோப்பையின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி பெரியளவில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த போட்டியைவிட பரபரப்பான போட்டி ஒன்று இருக்குமென்றால், அது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிதான்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் கடுமையாக ஆடும். கடந்த சில ஆண்டுகளாக இரு அணிகளும் சர்வதேச தொடர்களை தவிர வேறு போட்டிகளில் ஆடுவதில்லை என்பதால் சர்வதேச தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும்போது எதிர்பார்ப்பு எகிறுகிறது. 

அதிலும் உலக கோப்பை தொடர் என்றால் சொல்லவே தேவையில்லை. எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறிவிடும். இதுவரை உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 6 முறை மோதியுள்ளன. அதில் ஒருமுறை கூட இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை. உலக கோப்பையை பொறுத்தமட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 சதவிகித வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி.

இந்த உலக கோப்பையிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் 2 முறை அடி வாங்கியது. இம்முறை எப்படியாவது உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் பாகிஸ்தான் அணியும், பாகிஸ்தானுக்கு எதிரான சாதனையை விட்டுக்கொடுக்க விரும்பாத இந்திய அணியும் கடுமையாக ஆடும் என்பதில் சந்தேகம் இல்லை. 

உலக கோப்பையை ஜெயிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்றுவிட வேண்டும் என்ற அளவுக்கு குரல்கள் எழும். அந்தளவிற்கு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் முக்கியத்துவம் இருக்கிறது. 

இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பேசிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், பல ஆண்டுகளாகவே உலக கோப்பையை வெல்வது முக்கியமா? பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி முக்கியமா? என்ற கேள்வி கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நான் எப்போதும் சொல்லும் அதே பதிலையே சொல்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்றால் போதும் என்கிற அளவுக்கு பேசப்படும் கருத்துகள், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகமாக்குகிறது. 

ஆனால் உலக கோப்பை தொடரில் ஆடும்போது நாம் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். உலக கோப்பையில் ஆடும்போது கோப்பையை வெல்வது தான் அணியின் ஒற்றை இலக்கு. அதற்காகத்தான் நாம் அங்கு செல்கிறோமே தவிர ஒரு அணியை மட்டுமே எதிர்கொள்வதற்கோ வீழ்த்துவதற்கோ அல்ல. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுவதை விட கோப்பையை வெல்வதே முக்கியம்; அது நடக்கும் என நம்புவோம் என்று சச்சின் தெரிவித்தார்.