இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்ற நிலையில், இங்கிலாந்து அணி மற்றும் வெற்றிக்கு காரணமான ரூட் - பேர்ஸ்டோ ஆகியோருக்கு சச்சின் டெண்டுல்கர், அசாருதீன் ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 146 ரன்களையும், ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி ஜானி பேர்ஸ்டோ சதத்தின்(106) உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது. 132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் புஜாரா (66) மற்றும் ரிஷப் பண்ட்டை(57) தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொதப்பியதால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் வெறும் 245 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணி மொத்தமாக 377 ரன்கள் முன்னிலை பெற, 378 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ராவ்லி ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 107 ரன்களை குவித்தனர். க்ராவ்லி 46 ரன்களுக்கும், அரைசதம் அடித்த லீஸ் 56 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, ஆலி போப் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, 107 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி, 109 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

இதையும் படிங்க - டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்ட்களான கவாஸ்கர், பாண்டிங் சாதனைகளை தகர்த்து புதிய வரலாறு படைத்த ஜோ ரூட்

அதனால் இந்திய அணி பெற்ற கொஞ்சநஞ்ச நம்பிக்கையிலும், பேர்ஸ்டோவும் ரூட்டும் இணைந்து மண்ணை அள்ளிப்போட்டனர். இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். அதன்பின்னர் விக்கெட்டே இழக்காமல் அருமையாக பேட்டிங் ஆடினர். இந்திய பவுலர்கள் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி பேட்டிங் ஆடிய ரூட் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இருவரும் முறையே அடுத்தடுத்து சதமடித்து 378 ரன்கள் என்ற இலக்கை எட்டி இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர்.

378 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக விரட்டியதன் மூலம் இங்கிலாந்து அணி சாதனைகளை படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி வெற்றிகரமாக விரட்டிய அதிகபட்ச இலக்கு இதுதான். மேலும் இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விரட்டப்பட்ட அதிகபட்ச இலக்கும் இதுதான். 

இதையும் படிங்க - இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி.. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு

இங்கிலாந்து அணியின் சாதனை வெற்றி மற்றும் வெற்றிக்கு காரணமான ரூட் - பேர்ஸ்டோ ஆகியோரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் முகமது அசாருதீன் ஆகிய முன்னாள் இந்திய ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த டுவிட்டர் பதிவில், ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளனர். அவர்களது பேட்டிங்கை பார்க்கும்போது பேட்டிங் ஆடுவது மிக எளிது என்பதுபோல தெரிகிறது. இங்கிலாந்தின் அபார வெற்றிக்கு வாழ்த்துகள் என்று சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

378 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை அரை நாள் எஞ்சியிருக்க, அடித்து வெற்றி பெற்ற இங்கிலாந்தின் வெற்றி அபாரமானது. ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள். இங்கிலாந்தின் ஸ்பெஷலான வெற்றிக்கு வாழ்த்துகள் என்று அசாருதீன் வாழ்த்தியுள்ளார்.

Scroll to load tweet…