கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 800ஐ நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. நெருங்கிவிட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், இந்தியாவில் இன்னும் சமூக தொற்றாக அது பரவவில்லை. அதற்குள்ளாக ஊரடங்கு அமல்படுத்தி, மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதால், சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கடைகளுக்கு செல்லலாம் என்ற ஒரு விஷயத்தை தவறாக பயன்படுத்தி கொண்டு பலர் காரணமே இல்லாமல் பொதுவெளியில் சுற்றித்திரிகின்றனர். காரணமே இல்லாமலோ அல்லது பொய் காரணங்களை கூறியோ பைக்கிலும் கார்களிலும் சுற்றுபவர்கள் மீது போலீஸார் நாடு முழுவதும் வழக்குப்பதிவு செய்துவருகின்றனர்.

மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தொலைக்காட்சிகள் மூலமாகவும், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பலர் அலட்சியமாக வெளியே சுற்றுவதை பார்க்கமுடிகிறது. 

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு சற்று காட்டமாக அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசாங்கமும் மருத்துவர்களும் கொரோனாவை ஒழிக்க கடுமையாக உழைத்துவருகின்றனர். எனவே அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழப்பு கொடுக்க வேண்டும்.

மிகவும் இக்கட்டான காலக்கட்டத்தில் இருக்கிறோம். எனவே அனைவரும் பரஸ்பரம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் கூட மருத்துவமனையில் இருந்து ஓடிவிடுவதாகவும், வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டவர்கள் பொதுவெளியில் சுற்றித்திரிவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இது நமது சமூகத்திற்கு எந்த விதத்திலும் நல்லதல்ல. மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எனவே கொரோனாவிலிருந்து மீள, மக்கள் அரசாங்கத்தின் அறிவுரைகளை ஏற்று அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தியுள்ளார்.