உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதேயில்லை என்ற சாதனையை தக்கவைத்தது. 

உலக கோப்பையில் இதுவரை 7 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியுள்ளன. இதில் அனைத்து போட்டிகளிலுமே இந்திய அணி தான் வென்றது. இந்த உலக கோப்பைக்கு முன்னதாக ஆடிய 6 உலக கோப்பை போட்டிகளிலும் இந்திய அணி தான் வென்றிருந்தது. முதன்முறையாக இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் களம்கண்ட பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வியே அடைந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அதிரடி சதம், கோலி மற்றும் ராகுலின் அரைசதங்கள் ஆகியவற்றால் இந்திய அணி 336 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாகவும் ஆக்ரோஷமாகவும் ஆடிய ரோஹித் சர்மா 140 ரன்களை குவித்தார். ரோஹித் சர்மாவின் இந்த இன்னிங்ஸ் அவரது சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. 

பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடிய ரோஹித் சர்மா, ஹசன் அலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பவுன்ஸரை அப்பர் கட் ஷாட்டின் மூலம் கவர் திசையில் ஒரு சிக்ஸர் அடித்தார். 2003 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷோயப் அக்தரின் பந்தில் சச்சின் டெண்டுல்கர் அடித்த அப்பர் கட் ஷாட்டை ரோஹித்தின் ஷாட் நினைவூட்டியது. இதையடுத்து சச்சின் - ரோஹித் இருவரின் ஷாட்டையும் டுவிட்டரில் பகிர்ந்த ஐசிசி, இருவரில் யாருடைய ஷாட் பெஸ்ட்? என்று ஒரு கேள்வியை எழுப்பியிருந்தது. 

அந்த டூவிட்டை கண்ட சச்சின் டெண்டுல்கர், கிண்டலாக ஒரு பதிலளித்துள்ளார். நாங்கள் இருவருமே இந்திய வீரர்கள் மட்டுமல்லாது மும்பையை சேர்ந்தவர்கள். இரண்டு ஷாட்டில் எது பெஸ்ட் என்று தெரிந்துகொள்ள டாஸ் போடுங்கள். ஹெட் விழுந்தால் நான் வின்.. டெயில்ஸ் விழுந்தால் ரோஹித் தோல்வி என்று சச்சின் பதிவிட்டுள்ளார். 

அதாவது ஹெட் விழுந்தாலும் நான் தான் வின், டெயில்ஸ் விழுந்தாலும் நான் தான் வின் என்று சச்சின் கிண்டலாக பதிலளித்துள்ளார்.