தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்து கேப்டன் கோலி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியும், 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.
கேப்டவுனில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான டெஸ்ட். வரும் 11ம் தேதி (நாளை) கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் தொடங்குகிறது.
2வது டெஸ்ட்டில் காயத்தால் ஆடிராத கேப்டன் விராட் கோலி, அடுத்த டெஸ்ட்டில் ஆடுவார். எனவே அவருக்கு பதிலாக 2வது டெஸ்ட்டில் ஆடிய ஹனுமா விஹாரி நீக்கப்படுவார். அஜிங்க்யா ரஹானே மற்றும் புஜாரா ஆகிய 2 சீனியர் வீரர்களுக்கும் இன்னும் வாய்ப்பளிக்கப்படும் என்பதால், 3வது டெஸ்ட்டில் அவர்கள் ஆடுவார்கள். ஹனுமா விஹாரி தான் நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2வது டெஸ்ட்டில் பந்துவீசும்போது காயமடைந்த முகமது சிராஜுக்கு பதிலாக, 3வது டெஸ்ட்டில் இஷாந்த் சர்மா - உமேஷ் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார். அது இஷாந்த் சர்மாவாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது.
இந்நிலையில், இந்திய அணி காம்பினேஷன் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சபா கரீம், ரஹானே - புஜாரா கடந்த இன்னிங்ஸில் அரைசதம் அடித்தனர். ஆனால் அவர்கள் மாதிரியான அனுபவ வீரர்கள் எப்போதாவது அரைசதம் அடிப்பது என்பது பெரிய விஷயமல்ல. எனவே அனுபவம் வாய்ந்த திறமையான உள்நாட்டு வீரர்கள் அணிக்கு வலுசேர்ப்பார்களேயானால் அவர்களை சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். கோலி அடுத்த போட்டியில் ஆடுவதால் விஹாரி - ரஹானே ஆகிய இருவரில் யார் நீக்கப்படுவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. சிராஜ் ஆடவில்லை என்றால், இஷாந்த் - உமேஷ் ஆகிய இருவரில் நெட்டில் யார் நன்றாக பந்துவீசினாரோ அவரை ஆடவைக்க வேண்டும். அணி காம்பினேஷன் தொடர்பாக கேப்டன் விராட் கோலி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று சபா கரீம் கூறியுள்ளார்.
