லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 217 ரன்களை குவித்து 218 ரன்கள் என்ற கடின இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 16வது சீசன் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணி:

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, பிரசாந்த் சோலங்கி, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மிட்செல் சாண்ட்னெர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், மார்க் உட், யஷ் தாகூர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.

IPL 2023:பையன் செம டேலண்ட்; இந்த சீசனுக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்கும்! இளம் வீரருக்கு சேவாக் புகழாரம்

முதலில் பேட்டிங் ஆடிவரும் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் இணைந்து லக்னோ அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் ருத்ரதாண்டவம் ஆடினார். கடந்த போட்டியில் 92 ரன்களை குவித்த ருதுராஜ், விட்ட இடத்தில் இருந்து இன்னிங்ஸை தொடர்வது போல ஆடினார். 

அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 25 பந்தில் அரைசதம் அடித்தார் ருதுராஜ் கெய்க்வாட். அவருடன் இணைந்து டெவான் கான்வேவும் அடித்து ஆட, பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை குவித்தது. ஐபிஎல்லில் சென்னை சேப்பாக்கத்தில் பவர்ப்ளேயில் அதிகபட்ச ஸ்கோரை அடித்து சாதனை படைத்தது சிஎஸ்கே அணி. மேலும் ஐபிஎல்லில் பவர்ப்ளேயில் தங்களது 3வது அதிகபட்ச ஸ்கோரை அடித்தது. 

IPL 2023: என் மேல தான் தப்பு.. ஆர்சிபிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸின் படுதோல்வி..! ரோஹித் சர்மா சொன்ன காரணம்

அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் விக்கெட்டுக்கு சிஎஸ்கே அணி 110 ரன்களை குவித்தது. டெவான் கான்வே 29 பந்தில் 47 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ஷிவம் துபே 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 16 பந்தில் 27 ரன்கள் அடித்து கேமியோ ரோல் செய்தார். மொயின் அலி 13 பந்தில் 19 ரன்கள் அடித்தார். அம்பாதி ராயுடு 14 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 27 ரன்களையும், தோனி 3 பந்தில் 2 சிக்ஸர்களையும் விளாச, 20 ஓவரில் 217 ரன்களை குவித்தது சிஎஸ்கே அணி.

ஐபிஎல்லில் 24வது முறையாக 200 ரன்களை கடந்து, அதிகமுறை 200 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை படைத்து, 218 ரன்கள் என்ற கடின இலக்கை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு நிர்ணயித்தது.