ஐபிஎல் 16வது சீசனில் சிறப்பாக பேட்டிங் ஆடினால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூர்யகுமார் யாதவ் 2 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
இப்போது ஷுப்மன் கில், பிரித்வி ஷா, இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் அனைவருமே மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள். ஆனால் இவர்கள் அனைவருமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என்பதால், ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவதற்கு இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இவர்கள் நால்வருமே மிகத்திறமையான பேட்ஸ்மேன்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த ஷுப்மன் கில் - இஷான் கிஷன் இடையே கடும் போட்டி நிலவினாலும், ஷுப்மன் கில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார். ஒருநாள் உலக கோப்பையில் அவர் தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசன் இவர்கள் அனைவருக்குமே முக்கியமானது. இந்த சீசனில் ஆடுவதன் அடிப்படையில் இந்திய அணியில் இடம் கிடைக்கும்.
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் ஆடும் ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல்லில் 2021 சீசனில் சிஎஸ்கே அணி 4வது முறையாக கோப்பையை வென்றபோது அந்த சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர் ருதுராஜ் கெய்க்வாட். உள்நாட்டு கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியான சதங்கள், இரட்டை சதங்கள் என அசாத்திய சாதனைகளை படைத்து அசத்தினார்.
ருதுராஜ் கெய்க்வாட் மிகச்சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்தபோதிலும், இந்திய அணியில் இருக்கும் கடுமையான போட்டியால் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை. 2021ம் ஆண்டே இந்திய டி20 அணியில் அறிமுகமாகிவிட்ட ருதுராஜ் கெய்க்வாட், 9 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார்.
IPL 2023: தம்பி நீ சரிப்பட்டு வரமாட்ட.. தூக்கி எறியும் சிஎஸ்கே..! ஆடும் லெவனில் ஒரு அதிரடி மாற்றம்
இந்த சீசனின் முதல் போட்டியிலேயே 92 ரன்களை குவித்து இந்த சீசனையும் அபாரமாக தொடங்கியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். இந்நிலையில், இந்த சீசனில் அவர் நன்றாக ஆடினால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக், அரைசதம் அடிப்பது பெரிய விஷயமல்ல. ருதுராஜ் கெய்க்வாட் அரைசதங்களை சதங்களாக மாற்றுகிறார். அதுதான் அவருடைய ஸ்பெஷல். சிஎஸ்கேவிற்காக 2021ல் அபாரமாக ஆடி சதமெல்லாம் அடித்தார். ஆனாலும் அவருக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால் ருதுராஜ் கெய்க்வாட் அவரது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். இந்த சீசனில் அவர் நன்றாக ஆடினால் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
