ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் 232 ரன்களை குவித்த கேகேஆர் அணி, மும்பை இந்தியன்ஸை 198 ரன்களுக்கு சுருட்டி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால், டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவரான பும்ராவும் டெத் ஓவர்களை வெளுத்து கட்டும் ஆண்ட்ரே ரசலும் எதிரெதிராக ஆடியதுதான். இருவரில் யார் கெத்து என்பதை நிரூபிக்கும் போட்டியாக இது அமைந்தது. 

வழக்கம்போலவே அதிரடியாக ஆடிய ஆண்ட்ரே ரசல் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 40 பந்துகளில் 80 ரன்களை குவித்து கேகேஆர் அணியின் ஸ்கோரை 232 ரன்களாக உயர்த்தினார். 19வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை வைடாக வீசினார் பும்ரா. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் ரசல் ரன் எடுக்கவில்லை. இரண்டாவது பந்தில் ஒரு ரன் அடித்தார். மூன்றாவது பந்தை நோ பாலாக வீசினார் பும்ரா. அதில் ஒரு ரன் எடுக்கப்பட்டதால் மீண்டும் பேட்டிங் முனைக்கு சென்றார் ரசல். 

நோ பால் என்பதால் அதற்கு வீசப்பட்ட ஃப்ரீஹிட் பந்தில் பவுண்டரியும் அடுத்த பந்தில் சிக்சரும் அடித்தார் ரசல். பின்னர் கடைசி இரண்டு பந்துகளில் தனது கெத்தை காட்டினார் பும்ரா. தான் யார் என்பதை நிரூபிக்கும் விதமாக 2 பந்து வீசினார். ஐந்தாவது பந்தை இன் ஸ்விங் பவுன்ஸராக அபாரமாக வீசினார். தனது தலையை நோக்கி வந்த பந்தில் அடிவாங்காமல் ரசல் தப்பித்ததே பெரிய விஷயம். அந்த பந்திலிருந்து தப்பி கீழே விழுந்தார் ரசல். அடுத்த பந்தையும் அபாரமாக வீசினார் பும்ரா. அதிலும் லெக் பை மூலமாக ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. எப்படி போட்டாலும் அடிக்கும் முனைப்பில் ரசல் நின்ற நேரத்தில், அவரை ஒன்றுமே செய்ய முடியாமல் நிராயுதபாணியாக நிறுத்தினார் பும்ரா.