இந்திய அணிக்கு மூன்றுவிதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்கள் மற்றும் வீரர்களில் ஒருவரான தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். இந்திய அணிக்காக 350 ஒருநாள், 90 டெஸ்ட் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடிய தோனி, இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்களித்துள்ளார்.

2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பதில் வல்லவர். அதனாலேயே அவர் உலகின் பெஸ்ட் ஃபினிஷராக அறியப்பட்டார். ஆனால் 2019 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவரால் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியவில்லை. அது அவரது தவறு அல்ல. ஆனாலும் பெஸ்ட் ஃபினிஷரான தோனி, களத்தில் இருந்தவரை இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. கடைசி நேரத்தில் நெருக்கடி அதிகரிக்க, தோனி ஆட்டமிழந்தார்; இந்தியாவும் தோற்றது. 

அதன்பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தவிதமான போட்டிகளிலும் ஆடாத தோனி, கடந்த பதினைந்தாம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். இந்நிலையில், தோனி ஓய்வு அறிவித்ததற்கான காரணம் குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரரும், தோனிக்கு நெருக்கமானவருமான ஆர்பி சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஆர்பி சிங், தோனி அவரது ஃபிட்னெஸ் மற்றும் வயது ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முடிவெடுத்திருப்பார். 2019 உலக கோப்பையில் தோனி 4ம் வரிசையில் ஆடவேண்டும் என்று விரும்பியிருப்பார். ஆனால் அணி நிர்வாகம் அவரை பின்வரிசையில் இறக்கியது. அதனால் உலக கோப்பையில் அவருக்கு பெரும்பாலான போட்டிகளில் பேட்டிங் ஆடும் வாய்ப்பே கிடைக்கவில்லை. அவரால் அவரது பாணியில் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்க முடியவில்லை. அதுவே அவரது கெரியரின் முடிவு என்ற சிக்னலை அவருக்கு கொடுத்திருக்கும் என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.