இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். இந்திய அணிக்கு 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்தவிதமான போட்டியிலும் ஆடாத தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

தோனி டி20 உலக கோப்பையில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பை ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, அவர் ஓய்வு அறிவித்தார். போட்டிகளை முடித்துவைப்பதில் ஃபினிஷரான தோனி, 2019 உலக கோப்பையில் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியவில்லை என்றதும், இனிமேல் ஆடவேண்டாம் என்று தோனி முடிவெடுத்திருக்கக்கூடும் என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.

தோனி உலக கோப்பையில் 4ம் வரிசையில் ஆட விரும்பியதாகவும் ஆனால் அணி நிர்வாகம் அவரை அந்த வரிசையில் இறக்கவில்லை என்றும் தோனிக்கு நெருக்கமான ஆர்பி சிங் கூறியிருக்கிறார். 

2019 உலக கோப்பையில் இந்திய அணி சரியான 4ம் வரிசை வீரர் இல்லாமல்தான் ஆடியது. அரையிறுதிக்கு முந்தைய லீக் சுற்று போட்டிகளில் டாப் ஆர்டர்களில் யாராவது ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடியதால் இந்திய அணி வெற்றிகளை பெற்றது. அரையிறுதியில் ரோஹித், ராகுல், கோலி சொதப்ப, இந்திய அணியின் 4ம் வரிசை வீரர் இல்லாததன் விளைவை அறுவடை செய்தது இந்தியா. 

2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பதில் வல்லவர். அதனாலேயே அவர் உலகின் பெஸ்ட் ஃபினிஷராக அறியப்பட்டார். ஆனால் 2019 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவரால் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியவில்லை. அது அவரது தவறு அல்ல. ஆனாலும் பெஸ்ட் ஃபினிஷரான தோனி, களத்தில் இருந்தவரை இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. கடைசி நேரத்தில் நெருக்கடி அதிகரிக்க, தோனி ஆட்டமிழந்தார்; இந்தியாவும் தோற்றது. 

உலக கோப்பையில் தோனி நான்காம் வரிசையில் இறங்க ஆசைப்பட்டதாகவும், அணி நிர்வாகம் அவரை அந்த வரிசையில் இறக்கவில்லை என்றும், ஆர்பி சிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ஆர்பி சிங்,  தோனி அவரது ஃபிட்னெஸ் மற்றும் வயது ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முடிவெடுத்திருப்பார். 2019 உலக கோப்பையில் தோனி 4ம் வரிசையில் ஆடவேண்டும் என்று விரும்பியிருப்பார். ஆனால் அணி நிர்வாகம் அவரை பின்வரிசையில் இறக்கியது. அதனால் உலக கோப்பையில் அவருக்கு பெரும்பாலான போட்டிகளில் பேட்டிங் ஆடும் வாய்ப்பே கிடைக்கவில்லை. அவரால் அவரது பாணியில் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்க முடியவில்லை. அதுவே அவரது கெரியரின் முடிவு என்ற சிக்னலை அவருக்கு கொடுத்திருக்கும் என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.

தோனி நான்காம் வரிசையில் இறங்க விரும்பியும், அணி நிர்வாகம் அவரை இறக்கவில்லை என்று ஆர்பி சிங் கூறியிருப்பது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் அதிருப்தியும் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.