நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர் ரோஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.
நியூசிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் ரோஸ் டெய்லர். 2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியில் அறிமுகமான ரோஸ் டெய்லர், 15 ஆண்டுகளாக நியூசிலாந்து அணியின் முக்கியமான வீரராக ஜொலித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான ஃபார்மட்டிலும் 100 போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தவர் ரோஸ் டெய்லர்.
109 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7584 ரன்களை குவித்துள்ள ரோஸ் டெய்லர், 233 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி20 போட்டிகளில் ஆடி முறையே 8581 ரன்கள் மற்றும் 1909 ரன்களை குவித்துள்ளார்.
15 ஆண்டுகால கிரிக்கெட் கெரியரில் ஒரு ஐசிசி டிராபி கூட வெல்லவில்லை என்பது அவருக்கு பெரும் வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருந்துவந்த நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று அந்த குறையை தீர்த்துக்கொண்டார் டெய்லர். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து அணி வெல்ல முக்கிய பங்குவகித்தார் ரோஸ் டெய்லர்.
நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான ரோஸ் டெய்லர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
