இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் அவரது ஆஸ்தான வீரருமான சுரேஷ் ரெய்னாவும், சுதந்திர தினமான நேற்று, தங்களை கொண்டாடும் சென்னை மண்ணில்  ஓய்வு அறிவித்தனர். 

இருவரும் அடுத்தடுத்து ஓய்வறிவித்தது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தோனியின் கெரியர் முடிந்துவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே. தோனி ஓய்வு அறிவிக்க வேண்டியது மட்டுமே மிச்சமிருந்தது. அதனால் அவர் ஓய்வு அறிவித்தது கூட ஆச்சரியமில்லை. அவரைத்தொடர்ந்து ரெய்னாவும் ஓய்வறிவித்ததுதான் பேரதிர்ச்சி.  

ரெய்னாவின் ஓய்வு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ரோஹித் சர்மா, அதிர்ச்சியான விஷயம். ஆனால் நீ நினைத்த நேரத்தில் உன் முடிவை எடுத்திருக்கிறாய். நல்ல கெரியர் ப்ரோ.. ஓய்வுக்காலம் சிறப்பானதாக அமையட்டும். வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு நகர வாழ்த்துக்கள்.. நாம் இருவரும் அணிக்கு வந்த தருணம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது என்று பதிவிட்டு ரெய்னாவின் எதிர்காலத்திற்கு தனது வாழ்த்தை தெரிவித்தார் ரோஹித் சர்மா.

தோனி தலைமையிலான இந்திய அணியில் முன்னணி நட்சத்திர வீரராக ஜொலித்த ரெய்னா, கோலி கேப்டனான பிறகு ஓரங்கட்டப்பட்டார். 2018ம் ஆண்டுக்கு பிறகு ரெய்னா இந்திய அணியில் ஆடவில்லை. இனிமேல் இந்திய அணியில் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்காது என்பதை அறிந்து ரெய்னாவும் அதிரடியாக தனது ஓய்வை அறிவித்தார்.