சமகால கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரோஹித் சர்மா திகழ்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ரோஹித் சர்மா. 

2007ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ரோஹித் சர்மா, ஆரம்பத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாதன் விளைவாக அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்தார். மிடில் ஆர்டரில் தொடர்ச்சியாக சொதப்பிய ரோஹித் சர்மாவின் திறமையை அறிந்த முன்னாள் கேப்டன் தோனி, அவரை தொடக்க வீரராக இறக்கிவிட்டார். அதன்பின்னர் அனைத்தும் வரலாறு. 

தொடக்க வீரராக இறங்க கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கொண்ட ரோஹித் சர்மா, 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துகொண்டார். அதன்பின்னர் 2 இரட்டை சதங்களை விளாசிய ரோஹித் சர்மா, 3 இரட்டை சதங்களுடன் சாதனை நாயகனாக திகழ்கிறார். 

ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால், அவரிடமிருந்து ரசிகர்கள் இரட்டை சதத்தை எதிர்பார்க்குமளவிற்கு தன் மீதான ரசிகர்களின் மதிப்பீட்டை உயர்த்தியிருக்கிறார் ரோஹித். 

2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்த ரோஹித் சர்மா, அந்த போட்டியில் 209 ரன்களை குவித்தார். அதன்பின்னர் 2014ல் இலங்கைக்கு எதிராக 264 ரன்களை குவித்து அசாத்திய சாதனையை படைத்தார். மீண்டும் 2017ல் இலங்கைக்கு எதிராக இரட்டை சதமடித்தார். 2017ல் மொஹாலியில் இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் 40 ஓவர்களுக்கு மேல் சதத்தை எட்டிய ரோஹித் சர்மா, எஞ்சிய வெகுசில ஓவர்களில் இரண்டாவது சதத்தை அடித்து, ஒருநாள் கிரிக்கெட் கெரியரில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். 

ரோஹித் சர்மா இரட்டை சதமடித்ததும், அவரது மனைவி ரித்திகா அழுதார். அந்த புகைப்படங்கள் அந்த சமயத்தில் செம வைரலானது. இந்நிலையில், மயன்க் அகர்வாலுடனான உரையாடலில், தனது மனைவி ரித்திகா அழுததற்கான காரணத்தை ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, நான் எப்போதெல்லாம் அபாரமாக ஆடி புதிய மைல்கல்லை எட்டுகிறேனோ, அப்போதெல்லாம் என் மனைவி உணர்ச்சிவசப்பட்டுவிடுவார். அதிலும், இலங்கைக்கு எதிரான 2017ல் அடித்த அந்த இரட்டை சதம் ரொம்ப ஸ்பெஷலானது. அன்று எங்களது திருமண நாள். அந்த தினத்தில் அந்த இரட்டை சதத்தைவிட ஒரு சிறந்த பரிசை எனது மனைவிக்கு நான் கொடுத்திருக்க முடியாது. 197 ரன்கள் இருக்கும்போது, ரன் ஓடும்போது டைவ் அடித்தேன். அதில் எனது கையில் ஏதும் அடிபட்டிருக்குமோ என்று அவர் கலங்கிவிட்டார்.

உண்மையாகவே அந்த இன்னிங்ஸில் நான் இரட்டை சதமடிப்பேன் என நினைக்கவில்லை. ஏனெனில் ரொம்ப மெதுவாகத்தான் ஆடினேன். ஆனால் 125 ரன்களை கடந்த பிறகு நம்பிக்கை வந்தது. பவுலர்களும் அழுத்தத்தில் இருக்கிறார்கள். இனிமேல் நாமாக தவறு செய்தால் தான் அவுட்டாவோமே தவிர, அவர்கள் வீழ்த்துவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலை இருந்தது. எனவே பவுலர்கள் மீது இருந்த அழுத்தத்தை பயன்படுத்தி இரட்டை சதமடித்தேன் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.