ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி தலைசிறந்த வீரராக திகழும் ரோஹித் சர்மாவிற்கு, டெஸ்ட் அணியில் மட்டும் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்துவந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ரோஹித் சர்மா, அடுத்த சில மாதங்களுக்கு டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார். 

ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கியபோது படுமோசமாக சொதப்பினார். ரோஹித்தை முன்னாள் கேப்டன் தோனி தான் ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக இறக்கிவிட்டார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ரோஹித் சர்மா அபாரமாக ஆடி தனது திறமையை நிரூபித்தார். ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கியதுதான் அவரது கெரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசி அசத்தினார். 

டி20 கிரிக்கெட்டிலும் 4 சதங்களை விளாசியுள்ளார். ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே வீழ்த்தினால் தான் உண்டு. அவர் கவனமாக ஆடி களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின்னர் அவரை அவுட்டாக்குவது கடினம். களத்தில் நிலைத்து நின்றுவிட்டார் என்றால், அதன்பின்னர் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார். அதுதான் அவரது மிகப்பெரிய பலம். அதனால் தான் அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை விளாச முடிந்தது. 

ரோஹித் சர்மா நிலைத்து நின்றுவிட்டால், அதன்பின்னர் வேற லெவலில் ஆடி பெரிய ஸ்கோரை அடித்துவிடுவார் என்று முன்னாள் வீரர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் என பலதரப்பும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதே கருத்தைத்தான் ரோஹித்தும் தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆட்டநாயகன் விருதை வென்ற ரோஹித் பேசியபோது, தனது அபாரமான பேட்டிங்கின் ரகசியத்தை பகிர்ந்தார். இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, வெள்ளை பந்தோ அல்லது சிவப்பு பந்தோ எந்தவிதமான பந்தில், எந்தவிதமான போட்டியில் ஆடினாலும் சரி.. தொடக்கத்தில் கவனமாக ஆடவேண்டும். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை விட்டுவிட வேண்டும். உடம்புக்கு நேராக வரும் பந்துகளை அடிக்க வேண்டும்.

கவனமாக ஆடி களத்தில் நிலைத்துவிட்டு ஆக்ரோஷமாக ஆடுவதுதான் எனது கேம். ஆனால் ஆட்டத்தின் சூழல் தான் நாம் எப்படி ஆட வேண்டும் என்பதை தீர்மானிக்கும். சூழலுக்கு ஏற்றவாறு ஆட வேண்டும் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார். 

கவனமாக ஆடி களத்தில் நிலைத்துவிட்டு ஆக்ரோஷமாக ஆடி பெரிய ஸ்கோர் செய்வதுதான் தனது கேம் என்று ரோஹித்தே தெரிவித்துள்ளார்.