இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 116 இன்னிங்ஸ்களில் 4302 ரன்கள் எடுத்துள்ளார்.
ஹிட்மேன் என்று அழைக்கப்படும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.
67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, 116 இன்னிங்ஸ்களில் 4302 ரன்கள் எடுத்துள்ளார். 18 அரைசதங்கள், 12 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 212 ரன்கள்.
முதல் போட்டியிலேயே சதம்
ரோஹித் சர்மா தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார். நவம்பர் 6, 2013 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான ரோஹித், அந்தப் போட்டியில் சதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவரது ஆட்டம் மோசமாக இருந்ததால், அவர் டெஸ்ட் அணியில் நீடிப்பது கேள்விக்குறியானது.
புதிய கேப்டன் யார்?
இங்கிலாந்து எதிராக இந்திய அணி விளையாட இருக்கும் டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் இடம்பெற மாட்டார் என்றும் அவருக்குப் பதிலாக புதிய கேப்டன் நியமனம் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியானது. இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகம் ரோகித் சர்மாவுடன் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் தேர்வுசெய்யப்பட உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், சுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோருக்கு கேப்டன் பதவி வழங்க வாய்ப்புள்ளது. இவர்களில் இளம் வீரர் சுப்மன் கில் கேப்டன் பதவிக்கான ரேசில் முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வேகப்பந்து வீச்சாளரும் துணைக் கேப்டனுமான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு தொடர் முழுவதும் ஓய்வு கொடுக்கப்படும் என்றும் பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைநோக்குப் பார்வையுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் கருத்தில் கொண்டு, அணியில் இன்னும் சில முக்கிய மாற்றங்களும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


