ரிஷப் பண்ட் 40 நிமிடத்தில் போட்டியையே தலைகீழாக மாற்றக்கூடியவர் என்று கேப்டன் ரோஹித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார். 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-0 என ஒயிட்வாஷ் செய்து வென்றது. இந்த தொடரில் பேட்டிங், விக்கெட் கீப்பிங், டி.ஆர்.எஸ் எடுப்பதி உதவி என அனைத்துவகையிலும் தனது பணியை செவ்வனே செய்ததுடன், இந்திய அணி தொடரை வெல்ல முக்கிய பங்கு வகித்த ரிஷப் பண்ட் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 120.12 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 185 ரன்களை குவித்த ரிஷப் பண்ட், 2வது டெஸ்ட்டில் 28 பந்தில் அரைசதம் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

ரிஷப் பண்ட்டுக்கு ரோஹித் சர்மா புகழாரம்:

தொடர் நாயகன் விருதை வென்ற ரிஷப் பண்ட்டை பற்றி பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, அவரது இயல்பான பேட்டிங்கைத்தான் அவர் ஆடுகிறார். அவர் எப்படி பேட்டிங் ஆடுவார் என்று எங்களுக்கு தெரியும். ஒரு அணியாக நாங்கள், அவருக்கு முழு சுதந்திரம் அளிக்க விரும்புகிறோம். அவரது இயல்பான ஆட்டத்தை ஆடும் அதேவேளையில், ஆட்டத்தின் சூழல்களை பொறுத்து சில ஆலோசனைகளும் அவருக்கு அணியிடமிருந்து வழங்கப்படும். அவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவருகிறார். 40 நிமிடத்தில் போட்டியையே மாற்றக்கூடிய திறமைசாலி.

இந்த இலங்கை தொடரில் முக்கியமான விஷயம் என்றால், அவரது விக்கெட் கீப்பிங் தான். இந்த தொடரில் தான் அவரது சிறந்த விக்கெட் கீப்பிங்கை பார்த்தேன். இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செய்தார். இந்தியாவிற்காக விக்கெட் கீப்பிங் செய்யும்போது ஒவ்வொரு தொடரிலும் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறார். டி.ஆர்.எஸ் எடுக்கவும் மிகச்சரியாக வழிகாட்டினார் என்று ரிஷப் பண்ட்டை புகழ்ந்து பேசினார் கேப்டன் ரோஹித்.