இந்திய அணியில் ஒரேநேரத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என்ற இரண்டு தலைசிறந்த வீரர்களை பெற்றிருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம். 

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகின்றனர். விராட் கோலி மூன்று விதமான போட்டிகளிலும் வெகு சிறப்பாக ஆடி ரன்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடிவந்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதன்முறையாக தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா அந்த வாய்ப்பை பயன்படுத்தி அபாரமாக ஆடி சதங்களை விளாசி தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார். 

எனவே தற்போது ரோஹித்தும் மூன்றுவிதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டார். ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருமே பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவரும் நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே சாதனைகளை முறியடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. 

வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விராட் கோலி ஆடவில்லை. எனவே ரோஹித் சர்மா தான் கேப்டனாக இருந்து வழிநடத்தவுள்ளார். முதல் டி20 போட்டி நாளை டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடக்கவுள்ளது.

அந்த போட்டியில் ரோஹித் சர்மா வெறும் 8 ரன்கள் அடித்தால் சர்வதேச டி20யில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துவிடுவார். டி20 கிரிக்கெட்டில் வெறும் 67 இன்னிங்ஸ்களில் ஆடி 2450 ரன்களை குவித்துள்ள விராட் கோலி முதலிடத்திலும் 90 இன்னிங்ஸ்களில் 2443 ரன்களை குவித்துள்ள ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். விராட் கோலியை விட ரோஹித் சர்மா வெறும் 7 ரன்கள் தான் பின் தங்கியுள்ளார். எனவே முதல் போட்டியில் வெறும் 8 ரன்கள் அடித்தால் கோலியை ரோஹித் முந்திவிடுவார். 

இந்த தொடரில் கோலி ஆடாததால், ரோஹித் இந்த தொடரில் கண்டிப்பாக பெரியளவில் விராட் கோலியை முந்தி முதலிடத்தில் இருப்பார். தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன்பாக ரோஹித் தான் முதலிடத்தில் இருந்தார். அந்த தொடரில் தான் விராட் கோலி ரோஹித்தை முந்தி முதலிடத்தை பிடித்தார். இப்போது ரோஹித் சர்மா மீண்டும் கோலியை முந்தவுள்ளார்.