விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 176 ரன்களையும் மயன்க் அகர்வால் 215 ரன்களையும் குவித்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 431 ரன்களை குவித்தது. நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தின் காலையில்தான் தென்னாப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்தது. எனவே 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, அதிரடியாக ஆடி முடிந்தவரை ரன்களை குவித்துவிட்டு, இன்றைய ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் தென்னாப்பிரிக்காவை பேட்டிங் செய்ய விட வேண்டும் என்பதால், அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இறங்கியது. 

முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த மயன்க் அகர்வால், இந்த இன்னிங்ஸில் 7 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித்தோ அடித்து ஆடி ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார். ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த புஜாரா, மந்தமாக தொடங்கினாலும், களத்தில் நிலைத்த பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஆச்சரியப்படுத்தினார். அரைசதம் அடித்த புஜாரா 81 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா இந்த இன்னிங்ஸிலும் சதமடித்தார். 

சதத்திற்கு பின்னர் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து மிரட்டிய ரோஹித், 127 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். இதற்கு முன்னதாக விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி, ரஹானே ஆகிய வீரர்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்துள்ளனர். இவர்களில் கவாஸ்கர் மூன்று முறையும் ராகுல் டிராவிட் இரண்டுமுறையும், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோலவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 176 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸிலும் 127 ரன்களையும் குவித்துள்ள ரோஹித் சர்மா, மொத்தமாக 303 ரன்களை குவித்துள்ளார்.