பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா, 24வது சர்வதேச ஒருநாள் சதத்தை விளாசினார். 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. மான்செஸ்டாரில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித்தும் ராகுலும் களமிறங்கினர். ராகுல் நிதானமாக தொடங்க, ரோஹித் சர்மாவோ தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடினார். வழக்கமாக தவான் அதிரடியாக ஆட, ரோஹித் களத்தில் நிலைக்க நேரம் எடுப்பார். ஆனால் தவான் இல்லாததால், அவரது பணியை கையில் எடுத்த ரோஹித் அதிரடியாக ஆட, மறுமுனையில் ராகுல் நிதானமாக தொடங்கினார்.

ஹசன் அலி வீசிய ஆறாவது ஓவரிலேயே தனது டிரேட்மார்க் புல் ஷாட்டின் மூலம் சிக்ஸர் விளாசிய ரோஹித், தொடர்ந்து அதிரடியாகவே ஆடிவருகிறார். 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார். அரைசதத்துக்கு பிறகு ரோஹித் சர்மா தொடர்ந்து அதிரடியாக ஆட, மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ராகுலும் அதிரடியை தொடங்கினார். 

ரோஹித்தை தொடர்ந்து அரைசதம் கடந்த ராகுல், 57 ரன்களில் வஹாப் ரியாஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் தெளிவாக ஆடிய ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 24வது சதத்தை விளாசினார். 10வது ஓவரிலேயே ரோஹித்தை ரன் அவு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பாகிஸ்தான் அணி தவறவிட்டது. அதன்பின்னர் அவுட்டுக்கான வாய்ப்பே கொடுக்காத ரோஹித் சர்மா, அபாரமாக ஆடி சதமடித்தார். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடிக்கும் இரண்டாவது வீரர் ரோஹித் சர்மா. இதற்கு முன் விராட் கோலி மட்டுமே பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பையில் சதமடித்திருந்தார். 2015 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலி சதமடித்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்த வீரர் ரோஹித் தான். 

30 ஓவர்களை கடந்து இந்திய அணி ஆடிவரும் நிலையில், ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே இழந்துள்ளது. ரோஹித்தும் கோலியும் களத்தில் உள்ளனர். ரோஹித் சதமடித்து களத்தில் இருப்பதால், தனது ட்ரேட்மார்க் இன்னிங்ஸான பெரிய இன்னிங்ஸை ஆடுவது உறுதியாகிவிட்டது. தோனி, ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் என பவர் ஹிட்டர்கள் வரிசை கட்டியிருப்பதால் இந்திய அணி இமாலய ஸ்கோரை அடிப்பது உறுதி.