உலக கோப்பை தொடரில் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட இந்திய அணி, கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியுடன் ஆடிவருகிறது.

லீட்ஸில் நடந்துவரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் முதல் நான்கு விக்கெட்டுகள் 55 ரன்களுக்கே விழுந்துவிட்டது. அதன்பின்னர் மேத்யூஸும் திரிமன்னேவும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர்.

மிடில் ஓவர்களில் விக்கெட்டை எடுத்துத்தர வேண்டிய குல்தீப் யாதவின் பவுலிங் எடுபடவில்லை. குல்தீப் யாதவின் பவுலிங்கில் கொஞ்சம் கூட திணறாமல் சிறப்பாக சிங்கிள் ரொடேட் செய்தும் அடித்தும் ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். மேத்யூஸ் - திரிமன்னே ஜோடி 5வது விக்கெட்டுக்கு 124 ரன்களை சேர்த்தது. அரைசதம் அடித்த திரிமன்னே 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னரும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய மேத்யூஸ் சதம் விளாசினார். சதமடித்த மேத்யூஸ் 113 ரன்கள் அடித்து 49வது ஓவரில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் - திரிமன்னேவின் பொறுப்பான பேட்டிங்கால் 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 264 ரன்கள் அடித்தது.

265 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவருமே தெளிவாகவும் நிதானமாகவும் தொடங்கினர். அவசரப்படாமல் பொறுமையாக இன்னிங்ஸை பில்ட் செய்த இவர்கள் சிறப்பாக ஆடினர். ரோஹித் சர்மா அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து ராகுலும் அரைசதம் அடித்தார்.

வழக்கம்போலவே தனக்கு கிடைத்த நல்ல ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்றினார் ரோஹித் சர்மா. தொடர்ந்து சிறப்பாக ஆடி பவுண்டரிகளாக விளாசிய ரோஹித் சர்மா, இந்த உலக கோப்பையில் தனது 5வது சதத்தை விளாசி 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த சதத்தின் மூலம் ரோஹித் சர்மா ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2015 உலக கோப்பையில் சங்கக்கரா 4 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது 5 சதங்கள் அடித்து அந்த சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரரான சங்கக்கராவின் சாதனையை இலங்கை அணிக்கு எதிராகவே முறியடித்தார் ரோஹித்.