உலக கோப்பை தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. 

உலக கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடிவருகிறது. எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்த இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்வது ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் தான் திகழ்கின்றனர். பொதுவாக அரைசதங்களை எளிதாக சதமாக மாற்றக்கூடிய விராட் கோலியால், உலக கோப்பையில் 5 அரைசதங்கள் அடித்தும்கூட அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றமுடியவில்லை. 

ஆனால் ரோஹித் சர்மா அபாரமாக ஆடிவருகிறார். இந்த உலக கோப்பையில் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் ஆடி 4 சதங்களை விளாசியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக நேற்று அவர் அடித்தது இந்த உலக கோப்பையில் அவருக்கு 4வது சதம். இதன்மூலம் ஒரு உலக கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சங்கக்கராவுடன் பகிர்ந்துள்ளார். சங்கக்கரா 2015 உலக கோப்பையில் 4 சதங்கள் விளாசியிருந்தார். ரோஹித் சர்மா இந்த உலக கோப்பையில் இன்னும் ஒரு சதம் அடித்தால் அது அபார சாதனையாக அமைந்துவிடும்.

அதேபோல ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்குத் தள்ளி நான்காமிடத்தை பிடித்தார் ரோஹித் சர்மா. வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் 5 சிக்ஸர்கள் விளாசினார் ரோஹித் சர்மா. இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 230 சிக்ஸர்களை விளாசிய ரோஹித், 228 சிக்ஸர்களுடன் நான்காமிடத்தில் இருந்த தோனியை பின்னுக்குத்தள்ளி அந்த இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் 351 சிக்ஸர்களுடன் அஃப்ரிடி முதலிடத்திலும் 326 சிக்ஸர்களுடன் கெய்ல் இரண்டாமிடத்திலும் 270 சிக்ஸர்களுடன் ஜெயசூரியா மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

ரோஹித் சர்மா உலக கோப்பையில் இதுவரை 5 சதங்கள் அடித்துள்ளார். இந்த உலக கோப்பையில் நான்கு சதங்கள், 2015 உலக கோப்பையில் ஒரு சதம் என மொத்தம் 5 சதங்கள் அடித்துள்ளார். இதன்மூலம் உலக கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு(6 சதங்கள்) அடுத்த இரண்டாமிடத்தை சங்கக்கரா(5 சதங்கள்), பாண்டிங்(5 சதங்கள்) ஆகியோருடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இன்னும் ஒரு சதமடித்தால் முதலிடத்தை சச்சினுடன் பகிர்வார்.