சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, தொடர்ச்சியாக பல சதங்களையும், மிகப்பெரிய ஸ்கோரையும் அசால்ட்டாக அடித்து பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை செட் செய்துவருகிறார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் ஒருநாள் போட்டியில் ரோஹித்தும் ராகுலும் இணைந்து இந்திய அணிக்கு அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் - ராகுல் இருவருமே சதமடித்து, முதல் விக்கெட்டுக்கு 227 ரன்களை குவித்தனர். ராகுல் 102 ரன்களில் ஆட்டமிழக்க, சதமடித்த பின்னர் வழக்கமான தனது பாணியில் அதிரடியாக பேட்டிங் ஆடிய ரோஹித் சர்மா 159 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

இதன்மூலம் பல சாதனைகளை வாரிக்குவித்துள்ளார் ரோஹித் சர்மா. 

1.  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 150 ரன்களை கடப்பது இது 8வது முறையாகும். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 150 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற தனது சாதனையில் மற்றுமொரு சதத்தை கூடுதலாக சேர்த்துள்ளார். இதற்கு முன் 7 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்திருந்த ரோஹித் தான் முதலிடத்தில் இருந்தார். ரோஹித்துக்கு அடுத்த இடத்தில் 6 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்த டேவிட் வார்னர் இரண்டாமிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகிய இருவரும் தலா 5 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்து மூன்றாமிடத்திலும் உள்ளனர். 

2. இந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலியை பின்னுக்குத்தள்ளி ரோஹித் முதலிடத்தை பிடித்துவிட்டார். 

3. மேலும் 2013லிருந்து 2019ம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில், அதிகபட்ச ஸ்கோரை அடித்துள்ள வீரர் ரோஹித் சர்மா தான்.