இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்றது. 

இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன. கடைசி டி20 போட்டியில் காலில் காயமடைந்த ரோஹித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடைசி டி20 போட்டியில் பேட்டிங் ஆடியபோது, ரன் ஓடும்போது ரோஹித் சர்மாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நன்றாக பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த ரோஹித், 60 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸில் ஃபீல்டிங்கும் செய்யவில்லை. 

Also Read - நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனிடம் ராகுல் விடுத்த சுயநல கோரிக்கை

இந்நிலையில், அவரது காயம் குணமடைந்து அவர் முழு உடற்தகுதி பெற சற்று காலம் ஆகும் என்பதால் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு எதிரான இந்திய அணியிலிருந்து விலகியிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரோஹித் சர்மா விலகல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வராத நிலையில், அவர் விலகிவிட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஒருநாள் போட்டிக்கான அணியில் பிரித்வி ஷா இடம்பெற்றிருப்பதால், ராகுலுடன் பிரித்வி ஷா தொடக்க வீரராக இறங்குவார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் மயன்க் அகர்வாலும், தற்போது நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கும் ராகுலும் தொடக்க வீரர்களாக இறங்க வாய்ப்புள்ளது. டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட ராகுலுக்கு இது அரிய வாய்ப்பு. ரோஹித் காயத்தால் ராகுலுக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.