இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை, 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்றது. 

இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக இறங்கிய கேஎல் ராகுல், அனைத்து போட்டிகளிலுமே நன்றாக ஆடினார். இந்த தொடரில் 2 அரைசதங்கள் உட்பட அபாரமாக ஆடிய கேஎல் ராகுல் தான் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

கடைசி போட்டியில் கேப்டனாக செயல்பட இருந்த ரோஹித் சர்மா, காயம் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் களத்திற்கு வராததால், கேஎல் ராகுல் தான் கேப்டன்சி செய்தார். நெருக்கடியான சூழல்களை சிறப்பாக கையாண்டு வெறும் 164 ரன்கள் என்ற இலக்கை அடிக்கவிடாமல் ராகுல் கேப்டன்சியில் நியூசிலாந்தை சுருட்டி வெற்றி பெற்றது இந்திய அணி. 

கேஎல் ராகுல், வில்லியம்சன் பேட்டிங்கிற்கு ரசிகர் என்பதும், அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக அவர் ஏற்கனவே கூறியிருப்பதும் அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில், தொடர் நாயகன் விருதை வென்ற ராகுல், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கேன் வில்லியம்சனுக்கு கிண்டலாக ஒரு கோரிக்கை விடுத்தார். 

”2014-2015 ஐபிஎல் சீசன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நான் ஆடியபோது, வில்லியம்சனுடன் கூடவே இருந்து அவரை பார்த்திருக்கிறேன். அவருடன் பேட்டிங் குறித்து நிறைய பேசியிருக்கிறேன். எங்கள் இருவரது பேட்டிங் ஸ்டைலும் ஒரே மாதிரியாக இருப்பதாக கருதுகிறேன். 

அவரது பேட்டிங்கை பார்ப்பதே பெரிய விருந்தாக இருக்கும். ஆனால் வில்லியம்சன் அவரது பேட்டிங் விருந்தை எங்களுக்கு எதிரான ஒருநாள் தொடரில் படைத்துவிட வேண்டாம். ஐபிஎல்லில் கூட அந்த விருது எனக்கு வேண்டாம். ஏனெனில் எனது அணிக்கு எதிராக ஆடுவார். நான் சார்ந்த அணிக்கு எதிராக இல்லாமல், வேறு எந்த அணிக்கு எதிராக வில்லியம்சன் ஆடினாலும் அது எனக்கு விருந்துதான்” என்று ராகுல் தெரிவித்துள்ளார்.