ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளிலும் தோற்று இந்திய அணி தொடரை இழந்தது. 

முதல் டி20 போட்டியில் வெறும் 126 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி, 127 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலிய அணியை எளிதாக எட்டவிடவில்லை. பவுலிங்கில் நெருக்கடி கொடுத்து கடைசி பந்து வரை அந்த அணியை பதற்றத்திலேயே வைத்திருந்தது. எனினும் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. 

இதையடுத்து இரண்டாவது போட்டியில் சில மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே 3 மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கியது. மார்கண்டேவிற்கு பதில் விஜய் சங்கர் மற்றும் உமேஷ் யாதவிற்கு பதில் கவுல் ஆகிய இரண்டு மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ரோஹித்துக்கு பதில் தவான் என்பது தவறான முடிவு. 

ஏனெனில் பெங்களூரு சின்னசாமி மைதானம் சிறியது. ரோஹித்தோ அலட்டிக்கொள்ளாமல் எளிதாக பெரிய ஷாட்டுகளை ஆடக்கூடியவர். அந்த வகையில், இரண்டாவது போட்டியில் ரோஹித்தை அணியில் எடுத்திருந்தால், சிக்ஸர் மழை பொழிந்து இமாலய ஸ்கோரை எட்ட உதவியிருப்பார். 

நேற்றைய போட்டியில் கடுமையாக திணறிய தவான், 24 பந்துகளில் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய அணி 190 ரன்களை குவித்திருந்தாலும், பெங்களூரு சின்னசாமி மைதானம் போன்ற சிறிய மைதானங்களில் அந்த ஸ்கோர் கடினமான இலக்கு அல்ல. எனவே 220 ரன்கள் எடுத்தால்தான் ஆஸ்திரேலியா போன்ற அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அந்த வகையில் நேற்றைய போட்டியில் ரோஹித்தை சேர்த்திருக்க வேண்டும். மாறாக தவானை சேர்த்தது தவறான முடிவு. 

கேப்டன் விராட் கோலியும் அணி நிர்வாகமும் அணி தேர்வில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், எந்த போட்டியில் யாரை இறக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்து மிகச்சிறந்த 11 வீரர்களுடன் ஒவ்வொரு போட்டியிலும் அணி களமிறங்குவதை உறுதி செய்ய வேண்டும்.