ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரோகித் சர்மா ரூ.15 கோடி நிதியுதவி?
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரோகித் சர்மா ரூ.15 கோடி கொடுத்ததாக செய்தி பரவி வருகிறது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒடிசா விபத்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சினிமா, கிரிக்கெட், அரசியல் தலைவர்கள் என்று பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக் இந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ளார். அந்தக் குழந்தைகளுக்கு சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியில் இலவச கல்வியை வழங்குகிறேன் என்று கூறியுள்ளார். இதே போன்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஸ்கவுட் கேமிங் சேனல் ஏற்பாடு செய்தது. அந்த சேனல் மூலமாக சாஹல் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.15 கோடி நிதியுதவி அளித்ததாக செய்திகள் வெளியாகின. உண்மையில், அவர் அப்படி ஏதும் நிதியுதவி அளிக்கவில்லை. மாறாக டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒடிசாவில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எனது இதயம் நெகிழ்கிறது. துக்கத்தில் வாடும் குடும்பங்களுக்கு கடவுள் பலம் தரட்டும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.