முதல் போட்டி வரும் 3ம் தேதி(நாளை) டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடக்கவுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகமுள்ளதால் அங்கு ஆடுவது வீரர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் காலம் கடந்துவிட்டதால், இனிமேல் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது என்பதால் போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடந்தே தீரும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துவிட்டார். 

இந்தியா மற்றும் வங்கதேச வீரர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டதால் பயிற்சியை பாதியில் நிறுத்திவிட்டு உடனடியாக களத்திலிருந்து வெளியேறினார்.

வலைப்பயிற்சியில் நுவான் செனெவெரத்னே வீசிய பந்தில் ரோஹித்துக்கு காயம் ஏற்பட்டது. கோலி டி20 தொடரில ஆடாத நிலையில், ரோஹித் தான் கேப்டனாக செயல்படவுள்ளார். அதுமட்டுமல்லாமல் கோலி இல்லாததால் ரோஹித்தின் தோள் மீது கூடுதல் பொறுப்புள்ளது. அப்படியிருக்கையில், அவரும் காயத்தால் வெளியேறினால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கும் என ரசிகர்கள் வேதனையில் இருந்தனர். 

ஆனால் ரோஹித் சர்மாவிற்கு பிரச்னை ஒன்றுமில்லை. அவர் கண்டிப்பாக முதல் டி20 போட்டியில் ஆடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள பிசிசிஐ, வலைப்பயிற்சியின்போது ரோஹித் சர்மாவிற்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் அடிபட்டது. அவரை மெடிக்கல் டீம் பரிசோதித்தது. ரோஹித்துக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என மெடிக்கல் டீம் தெரிவித்துவிட்டதால், ரோஹித் ஆடுவதில் சிக்கல் இல்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

ரோஹித்துக்கு காலில் காயம் ஏற்பட்டதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால் அடிவயிற்றில் அடிபட்டதாகவும் அவருக்கு பிரச்னை இல்லை என்றும் பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.