ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு நிகராக சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார் ரோஹித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறக்கப்பட்ட பிறகு, அசாத்தியமான சாதனைகளை படைத்துவருகிறார் ரோஹித் சர்மா. யாருமே நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், 264 ரன்கள் என்ற மெகா தனிநபர் ஸ்கோர் என அசாத்திய சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளார். 

2019ம் ஆண்டு ரோஹித் சர்மாவிற்கு மிகச்சிறப்பானதாக அமைந்தது. உலக கோப்பையில் 5 சதங்களை அடித்து அசத்திய ரோஹித் சர்மா, 2019ம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையுடன் கடந்த ஆண்டை முடித்தார். 

இந்நிலையில், 2020ம் ஆண்டும் ரோஹித் சர்மாவிற்கு அருமையாக தொடங்கியிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 287 ரன்கள் என்ற இலக்கை விரட்டும்போது, அபாரமாக ஆடி, சதமடித்து அணியின் வெற்றியை எளிதாக்கினார் ரோஹித் சர்மா. 

Also Read - ரோஹித் சர்மா அபார சதம்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி

ஒருநாள் கிரிக்கெட்டில், இது ரோஹித் சர்மாவின் 29வது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெயசூரியாவின் சாதனையை முறியடித்து நான்காமிடத்தை பிடித்துள்ளார். ஜெயசூரியா 28 சதங்களுடன் நான்காமிடத்தில் இருந்தார். 29 சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா, ஜெயசூரியாவை பின்னுக்குத்தள்ளி நான்காமிடத்தை பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும் 43 சதங்களுடன் விராட் கோலி இரண்டாமிடத்திலும் 30 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் மூன்றாமிடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா இருக்கிறார். ரோஹித் இன்னும் 2 சதங்கள் அடித்தால், பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி மூன்றாமிடத்தை பிடித்துவிடுவார். 

Also Read - இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. ரிஷப் பண்ட்டுக்காக குரல் கொடுக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

ஒரே ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமான ரன்களை குவித்த தொடக்க வீரர் என்ற ஜெயசூரியாவின்(1997 - 2379 ரன்கள்) சாதனையை ரோஹித் சர்மா கடந்த ஆண்டு முறியடித்தார். இந்நிலையில்,  ஜெயசூரியாவின் அடுத்த சாதனையை முறியடித்துள்ளார்.