டி20 உலக கோப்பையில் அணியின் சீனியர் வீரரான தோனி ஆட வாய்ப்பேயில்லை. ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என்பது உறுதியாகிவிட்டது. தோனி ஆடும்போது, ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு கேப்டன் கோலிக்கும் பவுலர்களுக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கிக்கொண்டேயிருந்தார். 

தோனி-ரோஹித் ஆலோசனையால்தான் கோலி, வெற்றிகளை குவித்து இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெயரையே பெற முடிந்தது என்பது சிலரது கருத்து. அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், முற்றிலுமாக புறந்தள்ளிவிடவும் முடியாது. 

ரோஹித் அணியில் இருப்பதால்தான், கோலி நல்ல கேப்டனாகவே திகழ்கிறார் என்று கம்பீர் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்டே கொடுத்திருக்கிறார். கோலி கேப்டன்சியில் சொதப்பும்போதெல்லாம் ரோஹித்துடன் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கோலியின் கேப்டன்சி திறன் மேம்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், சீனியர் வீரர் தோனியின் ஆலோசனை இல்லாமலேயே கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிகளை குவித்துவருகிறது. தோனி இல்லாத குறையை ரோஹித் சர்மா தீர்த்துவருகிறார். கோலிக்கும் பவுலர்களுக்கும் தேவையான நேரத்தில் சிறப்பான ஆலோசனைகளை வழங்கிவருகிறார். 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆடாமல் ஓய்வில் இருந்துவரும் ரோஹித் சர்மா, ஹிந்துஸ்டான் டைம்ஸுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, கண்டிப்பாக கோலிக்கு அனைத்துவகையிலும் துணையாக இருப்பேன். ஆட்டத்தை பற்றியும் வீரர்கள் தேர்வு பற்றியும் அணியின் காம்பினேஷன் குறித்தும் எனது ஆலோசனையை கண்டிப்பாக வழங்குவேன். நான் துணை கேப்டன்.. எனவே வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? என்பதை ஆராய்ந்து அணியின் நலனுக்கு தேவையானதை செய்யவும், வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவரவும் கண்டிப்பாக எனது முழு பங்களிப்பை செய்வேன் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.