இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக இந்த போட்டியில்தான் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினார். டெஸ்ட் அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்க போராடிவந்த ரோஹித் சர்மா, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் 176 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்களையும் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்ததோடு ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். 

இந்த போட்டியில் சிறப்பாக ஆடியதன் விளைவாக, டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில், 53வது இடத்திலிருந்து 17வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரோஹித் சர்மா. இதுதான் டெஸ்ட் தரவரிசையில் ரோஹித் சர்மா எட்டியுள்ள சிறந்த ரேங்க். 

அதேபோல இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் என மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 10ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மீண்டும் டாப் 10 இடங்களுக்குள் வந்துவிட்டார் அஷ்வின். 

அதேபோலவே இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த ஷமி, தனது டெஸ்ட் கெரியரிலேயே அதிகபட்சமாக இப்போதுதான் 710 புள்ளிகளை பெற்றுள்ளார். இதன்மூலம் பவுலர்கள் தரவரிசையில் 18வது இடத்திலிருந்து 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த மயன்க் அகர்வால், 25வது இடத்தை பிடித்துள்ளார். இதுதான் அவரது டெஸ்ட் கெரியரில் அவர் பிடித்துள்ள சிறந்த இடம். இனிவரும் காலங்களில் சிறப்பாக ஆடி டாப் 10க்குள் மயன்க் வந்துவிடுவார் என்பதில் ஐயமில்லை.