வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க, கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரண்டாவது போட்டியில் ஆடிவருகிறது இந்திய அணி. 

விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு, இந்த முறையும் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து ரோஹித் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர்.

தொடக்க வீரர்கள் இருவரும் அவசரப்படாமல் மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடினர். அவசரப்பட்டு தவறான ஷாட்டுகளை ஆடாமல், ஷாட் செலக்‌ஷனில் மிகவும் கவனமாக இருந்தனர். ரோஹித் சர்மா வழக்கம்போல சற்று நிதானமாக ஆட, ராகுல் தனது இயல்பான ஷாட்டுகளை அசால்ட்டாக அடித்து விரைவாக ஸ்கோர் செய்தார். 

மிகச்சிறப்பாக, ஷாட்டுகளை எல்லாம் நேர்த்தியாக ஆடிய ராகுல், 46 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார். அவரை தொடர்ந்து ரோஹித்தும் அரைசதம் அடித்தார். இருவருமே களத்தில் நன்கு நிலைத்துவிட்டதால், சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

இருவருமே அபாரமான பேட்ஸ்மேன்கள் என்பதால், அவர்கள் களத்தில் நிலைத்துவிட்டதால் சற்று கலக்கத்தில் உள்ளது. ரோஹித் சர்மாவை தொடக்கத்திலேயே வீழ்த்தினால் தான் உண்டு. அவர் களத்தில் நிலைத்துவிட்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். இந்நிலையில், ரோஹித் மிகத்தெளிவாக ஆடி, அரைசதம் அடித்து களத்தில் நன்றாக செட்டில் ஆகிவிட்டதால், இன்றைய ஆட்டத்தில் அவரிமிடருந்து அணி நிர்வாகமும் ரசிகர்களும் பெரிய இன்னிங்ஸை எதிர்நோக்கியுள்ளனர். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்து ஆடிவருகிறது.