பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்துள்ளார். 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. மான்செஸ்டாரில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித்தும் ராகுலும் களமிறங்கினர். ராகுல் நிதானமாக தொடங்க, ரோஹித் சர்மாவோ தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடினார். வழக்கமாக தவான் அதிரடியாக ஆட, ரோஹித் களத்தில் நிலைக்க நேரம் எடுப்பார். ஆனால் தவான் இல்லாததால், அவரது பணியை கையில் எடுத்த ரோஹித், தொடக்கம் முதலே அடித்து ஆட, ராகுல் நிதானமாக ஆடிவருகிறார். 

ஹசன் அலி வீசிய ஆறாவது ஓவரிலேயே தனது டிரேட்மார்க் புல் ஷாட்டின் மூலம் சிக்ஸர் விளாசிய ரோஹித், தொடர்ந்து அதிரடியாகவே ஆடிவருகிறார். 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 100 ரன்களை நெருங்கிவிட்டனர். இந்திய அணிக்கு அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். ரோஹித் சர்மா தொடர்ந்து அதிரடியாக ஆடிவருகிறார்.