உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான அணி குறித்த விவாதங்கள் தான் ஹாட் டாபிக்காக உள்ளது.

உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், 2-3 வீரர்களை தேர்வு செய்வதற்காக சில வீரர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள். உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பல முன்னாள் வீரர்கள் தேர்வு செய்து அறிவித்துவருகின்றனர்.

லட்சுமணன், காம்பீர் ஆகிய முன்னாள் வீரர்கள் இந்திய அணியை தேர்வு செய்தனர். அந்த வகையில் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி உலக கோப்பை அணியை தேர்வு செய்துள்ளார்.

கோலி தலைமையிலான அணியில் தோனி, ராயுடு, கேதர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் என கண்டிப்பாக அணியில் இடம்பெறக்கூடிய வீரர்களை தேர்வு செய்தார்.

ரிசர்வ் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ள பின்னி, தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கரை அணியில் எடுத்துள்ளார். இவற்றையெல்லாம் கடந்து அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு தேர்வை செய்துள்ளார். 15 வீரர்கள் கொண்ட அணியில் தவானை எடுக்கவே இல்லை. ரோஹித்துடன் ராகுலை நிரந்தர தொடக்க வீரராக உலக கோப்பையில் களமிறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல் ரிசர்வ் தொடக்க வீரராக உலக கோப்பையில் எடுக்கப்பட உள்ளார். ஆனால் ரோஜர் பின்னி, தவான் அணியில் தேவையே இல்லை. ரோஹித்துடன் ராகுலையே இறக்கலாம் என்றும் இந்த ஜோடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுக்கும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். 

தவான் அண்மைக்காலமாக சரியான ஃபார்மில் இல்லாமல் பேட்டிங்கில் திணறிவருகிறார். அதேநேரத்தில் ராகுல் நல்ல ஃபார்மில் உள்ளார். 14 வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ள பின்னி, 15வது வீரராக ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டரை அணியில் சேர்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ரோஜர் பின்னி தேர்வு செய்துள்ள அணி:

ரோஹித், ராகுல், கோலி(கேப்டன்), ராயுடு, தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல், ரிஷப் பண்ட், விஜய் சங்கர்.

இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷிகர் தவான் திகழ்கின்றனர். ரோஹித் - தவான் ஜோடி சர்வதேச அளவில் மிகச்சிறந்த தொடக்க ஜோடியாக திகழ்கிறது. இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்து வருகின்றனர். தொடக்க ஜோடியாக இதற்கு முந்தைய பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகின்றனர். 

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் - தவான் ஜோடி நிரந்தர தொடக்க ஜோடியாக திகழ்வதால் மாற்று தொடக்க வீரரான ராகுலுக்கு அணியில் இடம் கிடைப்பதில்லை. ரோஹித் - தவான் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடிவருகின்றனர். நீண்டகாலமாக தொடக்க ஜோடியாக களமிறங்கிவருவதால் இவர்களுக்கு இடையே நல்ல புரிதல் இருக்கிறது. இந்நிலையில் ரோஜர் பின்னி தவானை நீக்கிவிட்டு ரோஹித்துடன் ராகுலை இறக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதே கருத்தை காம்பீரும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.