ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 3 முறை சாம்பியன்களான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகின்றன.

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் நல்ல நிலையில் உள்ளன. இந்த மூன்று அணிகளுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு பஞ்சாப், கேகேஆர், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே, லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தில் கடும் போட்டி நிலவும். 

இந்த சீசனை மிகவும் வெற்றிகரமாக தொடங்கிய அணி கேகேஆர் தான். ஆனால் அதன்பின்னர் தொடர் தோல்விகளின் காரணமாக புள்ளி பட்டியலில் பின் தங்கிவிட்டது. அந்த அணியின் பெரும்பாலான வெற்றிகளுக்கு ஆண்ட்ரே ரசல்தான் காரணம். ரசல் மட்டுமே அந்த அணியின் வெற்றிகளில் பெரும்பாலானவைக்கு சொந்தக்காரர். 

ஆர்சிபி அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கூட, கடைசி 6 ஓவருக்கு 102 ரன்கள் தேவை என்ற நிலையிலும் மிகுந்த மன உறுதியுடன் கடைசி வரை போராடினார் ரசல். 25 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். அந்த போட்டியில் மிடில் ஓவர்களில் ராபின் உத்தப்பா சற்று சுதாரிப்புடன் ஆடியிருந்தால் கடைசி நேர நெருக்கடி குறைந்திருக்கும்; கேகேஆர் வென்றிருக்கும். ஏனெனில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தான் அந்த அணி தோற்றது. 

ஆனால் மிடில் ஓவர்களில் 20 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் உத்தப்பா. அதுதான் கடைசியில் பெரிய வித்தியாசமாக அமைந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் உத்தப்பா ஒரு இன்னிங்ஸ் கூட சொல்லும்படியாக சிறப்பாக ஆடவில்லை. தொடர்ந்து ஃபார்மில் இல்லாமல் சொதப்பிவருகிறார். இந்நிலையில், சன்ரைசர்ஸுக்கு எதிராக இன்று நடந்துவரும் போட்டியில் உத்தப்பா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிங்கு சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

உத்தப்பா கேகேஆர் அணியின் துணை கேப்டனுமாக இருந்தும்கூட அவர் சரியாக ஆடாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு காரியப்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக பிரித்விராஜ் அணியில் இடம்பிடித்துள்ளார். 

கேகேஆர் அணி:

லின், நரைன், ராணா, கில், தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரசல், ரிங்கு சிங், காரியப்பா, சாவல், கர்னி, பிரித்விராஜ்.