இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி 502 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி, முதல் 4 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் எல்கருடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டுக்கொடுத்தார் டுப்ளெசிஸ். டுப்ளெசிஸ் 55 ரன்களில் ஆட்டமிழந்த பின்னர், எல்கருடன் ஜோடி சேர்ந்த டி காக், டுப்ளெசிஸ் விட்டுச்சென்ற பணியை அவரைவிட செவ்வனே செய்தார். 150 ரன்களை கடந்த எல்கர் 160 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய மற்றொரு வீரரான குயிண்டன் டி காக் சதமடித்து, தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். 

இந்த போட்டியில் ரோஹித் சர்மா முதன்முறையாக தொடக்க வீரராக இறங்கினார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக பல சாதனைகளை குவித்துள்ள ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக தொடக்க வீரராக இறங்குவதால் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அனைவரின் பார்வையும் கவனமும் ரோஹித் மீதே இருந்தன. 

இது ரோஹித்துக்கு ஒருவகையில் கடும் நெருக்கடியும் கூட. டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய ரோஹித் சர்மா, நெருக்கடியை எல்லாம் மண்டைக்கு ஏற்றாமல் அபாரமாக ஆடினார். தனது இயல்பான ஆட்டத்தை மிக கவனமாகவும் தெளிவாகவும் ஆடினார். தொடக்க வீரராக இறங்கிய முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்த ரோஹித், இரட்டை சதத்தை நோக்கி பயணப்பட்டார். ஆனால் மிகவும் அசால்ட்டாக ஸ்டம்பிங் ஆகி 176 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சத வாய்ப்பை தவறவிட்டார். 

ரோஹித் சர்மாவின் பேட்டிங் அபாரமாக இருந்தது. பெரிதாக பந்துகளை வீணடிக்காமல், ஸ்கோர் செய்தார். 244 பந்துகளில் 176 ரன்கள் அடித்தார். ரபாடா, ஃபிளாண்டர், கேசவ் மஹராஜ் ஆகியோரின் பவுலிங் ரோஹித்தை எந்தவகையிலும் அச்சுறுத்தவில்லை. மிகவும் நேர்த்தியாக ஆடி ஸ்கோர் செய்தார். 

ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக இறங்கி ஜொலிக்க தொடங்கிவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் இந்திய அணிக்கு செய்த பணியை ரோஹித்தால் செய்யமுடியும் என முன்பே ரோஹித்தை பல முன்னாள் வீரர்கள் புகழ்ந்து பேசியிருந்தனர். அதற்கேற்றவாறு ரோஹித்தும் பெரிதாக பந்துகளை வீணடிக்காமல் அபாரமாக ஆடி சதமடித்தார். இதையடுத்து சேவாக்குடனான ஒப்பீடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், சேவாக்குடன் ரோஹித்தை ஒப்பிடுவது குறித்து பேசியுள்ள ராபின் உத்தப்பா, ரோஹித்தை சேவாக்குடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது. ரோஹித்துக்கென்று ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. இருவருமே ஆக்ரோஷமான பேட்டிங் ஆடக்கூடியவர்கள் என்பது உண்மை. ஆனால் சேவாக் பந்துகளை அடித்து நொறுக்கிவிடுவார். ஆனால் ரோஹித் சர்மாவோ அலடிக்கொள்ளாமல் ஓங்கியெல்லாம் அடிக்காமல் டெக்னிக்கலாக அடித்து ஸ்கோர் செய்துவிடுவார். எனவே அவர்கள் இருவரும் பவுலர்களை அணுகும் விதம் வேறு வேறு. ஆனால் ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர்கள் என்ற ஒரு விஷயத்தில் இரண்டு பேரும் ஒன்றுபடுகிறார்கள் என்று ராபின் உத்தப்பா தெரிவித்தார்.